கோலாலம்பூர்: மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டை மாநில அரசு எவ்வாறு விநியோகிக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
எனவே, இந்த ஒதுக்கீட்டைப் பயன்படுத்துவது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று டாக்டர் மகாதீர் கூறினார்.
வழங்கப்பட்ட ஒதுக்கீடு முறையாக பயன்படுத்தப்படாவிட்டால், அதை மதிப்பீடு செய்ய மக்களுக்கு உரிமை உண்டு என்றும் அவர் கூறினார்.
“நாங்கள் பணம் கொடுக்கிறோம். ஆனால், நிபந்தனை விதிக்கவில்லை. அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்களோ செய்யலாம், ஆனால், ஏதாவது தவறு செய்தால், மக்கள் தண்டிப்பார்கள்,” என்று அவர் நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அண்மையில், கிளந்தான் மாநில மந்திரி பெசார் பயன்படுத்த மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார் வாங்குவது குறித்து கருத்து கேட்கப்பட்டபோது அவர் இதனை கூறினார்.
இருப்பினும், இது குறித்து கருத்து தெரிவித்த துணை முதல்வர் டத்தோ முகமட் அமார் நிக் அப்துல்லா, வாகனம் வாங்குவது 2018-ஆம் ஆண்டு முதல் முடிவு செய்யப்பட்டதாகவும், சிலர் கூறுவதைப் போல மத்திய அரசு வழங்கிய 400 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து பயன்படுத்தவில்லை என்றும் கூறினார்.