Home One Line P1 “அட்சயப் பாத்திரத் திட்டத்தின் பயனாளிகளுக்கு நன்றி” – பொன்.வேதமூர்த்தி

“அட்சயப் பாத்திரத் திட்டத்தின் பயனாளிகளுக்கு நன்றி” – பொன்.வேதமூர்த்தி

850
0
SHARE
Ad

கோலாலம்பூர்: “மித்ராவின் அட்சய பாத்திரத் திட்டத்தின்வழி பயனடையும் நலிந்த குடும்பத்தினருக்கு முதற்கண் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மாறாக, இந்த உதவியைப் பெறும் எவரும் எங்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டாம்” என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி ‘அட்சய பாத்திரம்’ அறிமுக நிகழ்ச்சியில் பேசினார்.

“வறிய நிலையில் உள்ளவர்களுக்கு உதவி செய்யும் வாய்ப்பு கிட்டினால், அந்த உதவியைப் பெற்றுக் கொள்பவர்களுக்கும் அத்தகைய வாய்ப்பு கிடைத்ததற்கும் உதவி செய்பவர்கள்தான் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளதை இவ்வேளையில் எண்ணிப் பார்க்கிறேன்” என்று கோலாலம்பூர் ஸ்தாப்பாக் ஜெயண்ட் வணிக வளாகத்தில் நேற்று சனிக்கிழமை (ஜனவரி 17) நடைபெற்ற அட்சய பாத்திர அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பயனாளிகள், பொதுமக்கள், ஊடகத் துறையினர், சமூக ஆர்வலர்கள், அரசு சாரா அமைப்பினர் ஆகியோரிடையே உரையாற்றியபோது தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான அவர் குறிப்பிட்டார்.

பி-40 இந்தியத் தரப்பினருக்கு குறிப்பாக வறிய நிலையில் உள்ள குடும்பங்களின் இன்னலைத் தீர்க்கவும் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டவுமான இத்திட்டத்தில் 3,000 குடும்பங்களுக்கு மாதந்தோறும் 150 வெள்ளி மதிப்புள்ள உணவுப் பொருள் வழங்கப்படும். வாழ்க்கையில் சிரமப்படும் குடும்பத்தினருக்கு இது சிறிய உதவிதான் என்றாலும் இதன் மூலம் அவர்கள் ஓரளவு ஆறுதல் பெற முடியும். தவிர, அவர்களும் தங்களை மாற்றிக் கொள்ளவும் முன்னேற்றிக் கொள்ளவும் முயற்சி மேற்கொள்ளக் கூடும்.

#TamilSchoolmychoice

முதற்கட்டமாக ஓர் ஆண்டு காலத்திற்கு வரையப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்கு மித்ரா 5.4 மில்லியன் வெள்ளியை ஒதுக்கி உள்ளது. இந்த அட்சய பாத்திரத்  திட்டத்தில் இணைந்துள்ள குடும்பத் தலைவியோ அல்லது தலைவரோ ரொக்கத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மைடின், எக்கோன்சேவ், ஜெயண்ட், டெஸ்கோ, ஸ்பீட்மார்ட் 99 போன்ற பேரங்கடிகளில் தத்தம் அடையாள அட்டைகளின் மூலம் தேவையான மளிகைப் பொருட்-களைப் பெற்றுக் கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

‘மை காசே’ அறவாரிய ஒருங்கிணைப்புடனும் இதே அறவாரிய தரவுதள ஒத்துழைப்புடனும் ஜோகூர், கெடா, நெகிரி செம்பிலான், மலாக்கா, பகாங், பேராக், பினாங்கு, சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த குடும்பங்கள் இந்த உதவியைப் பெற்றிட வகை செய்யப்பட்டுள்ளது.

மை காசே அறவாரிய துணைத் தலைவர் ஜெஃப்ரி பெரேரா, பொன்.வேதமூர்த்தியின் சிறப்பு அதிகாரிகள் செ. இராஜமோகன், வே. மாதவன், மித்ரா அதிகாரிகள் மற்றும் பணியாளர்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் மித்ரா தலைமை இயக்குநர் ம.மகாலிங்கத்திற்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

மித்ரா உதவி இயக்குநர்களான திலக் சிவஞானமும் நோர் அத்திகா சாவியும் வழிநடத்திய இந்த நிகழ்ச்சியில் சிலாங்கூர் மற்றும் கூட்டரசுப் பிரதேச மாநிலங்களில் இருந்து அட்சய பாத்திர பயனாளிகள் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.