நெட்பிலிக்சில் ‘ஐரிஷ்மேன்’ பார்த்து விட்டீர்களா? என்ற கேள்விகள் திரைப்பட இரசிகர்களிடையே அடிக்கடி பரிமாறிக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் படத்தை உலகம் எங்கும் மில்லியன்கணக்கான பேர்கள் பார்த்து விட்டார்கள் என்ற செய்திகள் வெளிவந்து மேலும் ஆர்வத்தைத் தூண்ட, உடனடியாக நெட்பிலிக்சில் பார்த்து இரசித்து, சிறந்த சினிமா அனுபவத்தைப் பெற்றவர்களில் நானும் ஒருவன்.
தொடர்ந்து கோல்டன் குளோப் திரைப்பட விழா பரிந்துரைகளில் சிறந்த படம் உட்பட 5 பிரிவுகளுக்கு அந்தப் படம் பரிந்துரைக்கப்பட்டதும், அடுத்து வந்த ஆஸ்கார் விருதுகள் பரிந்துரைகளில் சிறந்த படம் உள்ளிட்ட 10 பிரிவுகளில் பரிந்துரைகளைப் பெற்றிருப்பதும் அந்தப் படத்தின் மகத்துவத்தை மேலும் கூட்டியிருக்கிறது.
இந்தப் படத்தை இதுவரை பார்க்காதவர்கள், பார்க்கும் எண்ணம் கொண்டிருந்தால் அதற்கு முன்பாக, அமெரிக்க அதிபர் ஜோன் கென்னடி அதிபர் பதவியை எப்படி கைப்பற்றினார் –
அதைத் தொடர்ந்து அமெரிக்க அரசாங்கத்தில் அவரது சகோதரர் ராபர்ட் கென்னடி, அரசு தலைமை வழக்கறிஞராக பதவி வகித்தபோது எத்தகைய முடிவுகளை எடுத்தார் –
ஜிம் ஹோஃபா (Jim Hoffa) என்பவர் யார்? அவர் தலைமைப் பொறுப்பேற்றிருந்த ‘டீம்ஸ்டர்ஸ்’ (Teamsters) என்ற போக்குவரத்து ஊழியர்களின் தொழிலாளர் சங்கம் (யூனியன்) குறித்த சில விவரங்கள் –
ஜிம் ஹோஃபா கொல்லப்பட்டாரா?
போன்ற சில அடிப்படை விவரங்களை விக்கிபீடியா, இணையம் போன்ற தரவுகளிலிருந்து பார்த்துத் தெரிந்து கொண்டு அதன் பின்னர் ஜரிஷ்மேன் படத்தைப் பார்த்தால் நிச்சயம் உங்களுக்கு அந்தப் படம் மேலும் விளக்கமாகப் புரியும். அற்புதமான சினிமா அனுபவமும் கிடைக்கும்.
கதை – திரைக்கதை

3 மணி நேரம் 29 நிமிடங்கள் ஓடும் படத்தின் திரைக்கதை, 2004-இல் வெளிவந்த – சார்ல்ஸ் பிராண்ட் என்பவர் எழுதிய – ‘ஐ ஹெர்ட் யு பெயிண்ட் ஹவுசஸ்’ (I Heard You Paint Houses) என்ற உண்மைச் சம்பவங்களைக் கொண்ட நாவலைத் தழுவி புனையப்பட்டிருக்கிறது.
மார்ட்டின் ஸ்கோர்செசி என்ற பிரபல இயக்குநரால் பல ஆண்டுகள் திட்டமிட்டு பல போராட்டங்களுக்குப் பின்னர் எடுக்கப்பட்ட படம், ஒரு முதியோர் இல்லத்தில் இருக்கும் பிராங்க் ஷிரான் (ராபர்ட் டி நீரோ) என்பவர் தன் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை விவரிப்பதுடன் தொடங்குகிறது.
இரண்டாம் உலகப் போரில் இராணுவத்தில் பணியாற்றிய ஷிரான் பின்னர் மாட்டிறைச்சி விநியோகம் செய்யும் வாகனத்தின் ஓட்டுநராகப் பணியாற்றி அதன் தொடர்பில் சில மாபியா தலைவர்களுடன் நட்பு கொள்கிறார். மாபியா கும்பலில் சில வேலைகளை – அதாவது கொலைகளை – பணத்துக்காகச் செய்யத் தொடங்குகிறார்.
அவருக்குத் தலைவன் போன்று கொலைகளை செய்வதற்கான கட்டளைகளை இடுவது ரசல் பஃபாலினோ (ஜோ பெசி). அந்தக் காலக் கட்டத்தில் டீம்ஸ்டர்ஸ் எனப்படும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான யூனியனின் பலம் வாய்ந்த தலைவராகத் திகழ்பவர் ஜிம் ஹோஃபா (அல் பசினோ). ஜிம் ஹோஃபாவுக்குப் பிரச்சனை என்று கூறி அவருக்கு உதவ ஷிரானுக்குக் உத்தரவிடுகிறார் பஃபாலினோ.

ஜிம் ஹோஃபாவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக மாறுகிறார் ஷிரான். கால ஓட்டத்தில் அதிபர் கென்னடியின் சகோதரர் ராபர்ட் கென்னடி, அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் என்ற முறையில் கொண்டு வந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜிம் ஹோஃபா சிறைக்கு செல்கிறார். டீம்ஸ்டர்ஸ் யூனியனின் தலைமைத்துவம் கைமாறுகிறது. அதிபராக வரும் நிக்சனின் ஆதரவால் சிறையிலிருந்து வெளிவரும் ஜிம் ஹோஃபா மீண்டும் டீம்ஸ்டர்ஸ் யூனியனைக் கைப்பற்ற முயற்சி செய்ய, அதைத் தொடர்ந்து அவருக்கும் மாபியா கும்பலுக்கும் ஏற்படும் முரண்பாடுகள், ஷிரான் அந்தச் சிக்கலில் என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் படத்தின் உச்சகட்டம்.
கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் என மாறி மாறிக் கதை சொல்லப்பட்டாலும் சற்றும் குழப்பமில்லாத திரைக்கதை. எடுத்தாளப்பட்ட சிறந்த திரைக்கதை (Adapted Screenplay) என்ற ஆஸ்கார் விருதுப் பிரிவுக்கும் இந்தப் படம் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
முழுக்க முழுக்க ஒரு மாபிய கொலைகாரனின் வாக்குமூலங்கள், அவனது குடும்பம், அவனைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் ஆகியவற்றின் கலவைதான் கதை என்றாலும், அதனூடே நடக்கும் அமெரிக்க அரசியலின் சதியாட்டங்கள், மாபியா கும்பல் சித்தாந்தங்களின் வெளிப்பாடுகள் ஆகியவற்றையும் நாம் புரிந்து கொள்ளும் வண்ணம் திரைக்கதை பின்னப்பட்டிருக்கிறது.
படத்தின் பலம்

படத்தின் மிகப்பெரிய பலம் இரண்டு அம்சங்கள். ஒன்று இயக்குநர் மார்ட்டின் ஸ்கோர்செசியின் அனுபவம் மிக்க இயக்கத் திறன். காட்சிகளை அடுக்குவதில் உள்ள நேர்த்தியும், படம் மெதுவாகச் சென்றாலும், அதன் தாக்கத்தை திரைமொழியில், பார்க்கும் இரசிகனுக்குக் கடத்துவதில் அவருக்கு இருக்கும் திறனும் படத்தைப் பார்க்கும்போதுதான் புரியும்.
அடுத்த அம்சம் நடிப்பு. ராபர்ட் டி நீரோ, அல் பசினோ, ஜோ பெசி ஆகிய மூவரும் போட்டி போட்டுக் கொண்டு, தங்களின் 70-ஐக் கடந்த வயதுகளிலும் சுறுசுறுப்பான அட்டகாசமான நடிப்பை வழங்கியிருக்கின்றனர்.
அல் பசினோ, ஜோ பெசி இருவருமே சிறந்த துணை நடிகர்களுக்கான ஆஸ்கார் விருதுப் பட்டியலில் இந்தப் படத்திற்காக இடம் பெற்றுள்ளனர் என்பதே அவர்களின் நடிப்புத் திறனுக்கான சான்று.
நடிப்பு என்று வரும்போது படத்தில் முந்துகிறவர் அல் பசினோதான். மேடையில் யூனியன் தலைவராக முழங்குவது, அதிகாரத் தோரணை, மாபியா கும்பலுடன் மோதல், வழங்கப்படும் ஆலோசனைகளை குரலை உயர்த்தி மறுப்பது என இரசிக்க வேண்டிய நடிப்பு.
இந்த மூன்று நடிகர்களின் இளவயதுத் தோற்றங்களும், கணினி மூலமாக தொழில்நுட்பத் துறையில் திருத்தப்பட்டு காட்டப்படுவது படத்தின் இன்னொரு சிறப்பம்சம்.
படத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்தும் விளக்க வேண்டியதில்லை. 10 பிரிவுகளில் ஆஸ்காருக்குப் பரிந்துரை என்பதே படத்தின் தொழில்நுட்ப அம்சங்களின் உயர்வை எடுத்துக் காட்டும். 159 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் தயாரிக்கப்பட்ட படம் என்பது படத்தின் தரத்திற்கு இன்னொரு சான்று.
படத்தைப் பார்த்து இரசிக்க ஒரே பிரச்சனை என்னவென்றால் நீங்கள் நெட்பிலிக்சில் கட்டணம் செலுத்தி இணைந்து பார்க்க வேண்டும். அல்லது ஏற்கனவே வாடிக்கையாளராக இருக்கும் ஒருவரின் துணையுடன் பார்க்க வேண்டும்.
இந்தப் படம் மலேசியாவில் திரையிடப்படாது என்பதும், நெட்பிலிக்சில் மட்டுமே பார்க்க முடியும் என்பதும் இன்னொரு கொசுறுத் தகவல்.
அப்படி நேரத்தை ஒதுக்கிப் பார்த்தீர்களேயானால், அதற்காக மகிழ்ச்சியடைவீர்கள் என்பதோடு, ஜரிஷ்மேன் படத்தின் தாக்கங்கள் நீண்ட நாட்களுக்கு உங்கள் நெஞ்சில் பதிந்திருக்கும் என்பதும் திண்ணம்.