கோலாலம்பூர்: சீனப் புத்தாண்டை முன்னிட்டு நியாயமற்ற முறையில் விலைகளை உயர்த்தும் வணிகர்கள் மீது உள்நாட்டு வணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சகம் தீர்க்கமான நடவடிக்கையை எடுக்கும் என்று அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
2020-ஆம் ஆண்டுக்கான சீன புத்தாண்டு கொண்டாட்டத் திட்டம் மூலமாக எந்தவொரு தற்போதைய விலை நிர்ணயிப்புடன் இணங்காத வணிகர்களுடன் அமைச்சகம் பொறுத்துக்கொள்ளாது என்று அவர் கூறினார்.
அபராதம் மற்றும், அல்லது சிறைத் தண்டனைகள் விதிக்கப்படலாம் என்று நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
ஜனவரி 20 முதல் பிப்ரவரி 2 வரை இந்த நடவடிக்கைகள் நடைமுறையில் இருக்கும் என்றும், 16 அத்தியாவசிய பொருட்களுக்கு அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்படும் என்றும் அவர் வணிகர்களை எச்சரித்தார்.
“2,300-க்கும் மேற்பட்ட அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் அனைத்து வணிக வளாகங்களையும் தீவிரமாக கண்காணிப்பார்கள்” என்று அவர் கூறினார்.
019-2794317 என்ற எண்ணில் வாட்சாப் உள்ளிட்ட ஒன்பது புகார் மையங்கள் மூலமாக அமைச்சுக்கு புகார் அளிப்பதன் மூலம் பயனர்கள் இந்த முயற்சிக்கு பங்களிக்க முடியும் என்று அவர் கூறினார்.