கோலாலம்பூர், ஏப்.9- அதிகமான இந்திய வேட்பாளர்கள் நாடாளுமன்ற தொகுதிகளிலும், சட்டமன்ற தொகுதிகளிலும் நிறுத்தப்படாவிட்டாலும், 13ஆவது பொதுத்தேர்தலின் வெற்றியை உறுதி செய்பவர்களாக இந்தியர்கள் விளங்குகின்றனர் என்று பிரதமர் நஜிப் தெரிவித்தார்.
இது பற்றி நஜிப் மேலும் கூறுகையில், “நாட்டின் மக்கள் தொகையில் 3ஆவது நிலையில் இந்தியர்கள் இருந்து வருகின்றனர். ஆனால் வரும் பொதுத்தேர்தலில் இந்தியர்களின் பங்கு மிக அவசியமானது.
எனவே, எதிர்க்கட்சிகள் வசமுள்ள மாநிலங்களை தேசிய முன்னணியின் வசம் மீண்டும் திரும்ப வேண்டுமானால் இந்தியர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே முடியும்”
என்று பெர்னாமா தொலைக்காட்சியில்‘ஹலோ மலேசியா’நிகழ்ச்சியின் தமிழ்ப் பகுதிக்கு வழங்கிய நேர்காணலின் போது மேற்கண்ட தகவல்களை நஜிப் கூறினார்.
மேலும், தான் துணைப்பிரதமராக இருந்த கால கட்டத்திலேயே இந்தியர்களின் பிரச்சினை குறித்து அறிந்திருப்பதாகவும், தான் பிரதமர் பதவியை ஏற்ற பிறகு இந்தியர்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ‘நம்பிக்கை’ என்ற சொல்லைக் கூறியதாகவும், எனவே, தற்போது நம்பிக்கை என்ற அந்த சொல் இந்தியர்களின் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது என்றும் நஜிப் கூறினார்.
அத்துடன், தான் பிரதமர் பதவியை ஏற்ற பின் இந்தியர்களின் பிரச்சினைகளைக் களைய வேண்டும் என்ற நோக்கில் சிறப்பு குழு தோற்றுவித்து, அதன் வழி 7,000 இந்தியர்களுக்கு பிறப்புப் பத்திரம், அடையாள அட்டை பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்றும், இந்தியர்களின் சொத்துடமையை உயர்த்துவதில் அரசாங்கமே நேரடியாக களமிறங்கி உதவ இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.