சென்னை: அண்மையில் சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 50-வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு சர்ச்சைக்குரிய விதமாக பேசியது பலரது எதிர்ப்புக்கு வித்திட்டது.
குறிப்பாக, தந்தை பெரியார் குறித்து சில கருத்துகளை ரஜினிகாந்த் முன்வைத்துள்ளார். அவ்விழாவில் பேசிய அவர், மூடநம்பிக்கைக்கு எதிராக பெரியார் ஒரு பேரணியை நடத்தியதாகவும், அப்பேரணியில் ராமர் மற்றும் சீதாவின் உருவச் சிலைகள், படங்கள் நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறினார்.
இந்த கூற்றுக்கு பிறகு திராவிட இயக்கங்களிடமிருந்து ரஜினிகாந்துக்கு பெரும் எதிர்ப்பு எழுந்தது.
ரஜினி சொன்னது போல எந்த சம்பவமும் நடக்கவில்லை என்றும், அவர் வரலாற்றைத் திரித்து சொல்கிறார் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்கு ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பல தரப்பினர் வலியுறுத்தினர்.
இன்று செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து தாம் மன்னிப்புக் கோர அவசியமில்லை என்றும், தமக்கு சான்றாக இருந்த பத்திரிகையையும் அவர் முன்வைத்துள்ளார்.
வெறுப்பைத் தூண்டும் வகையில் ரஜினிகாந்த் பேசியுள்ளதாகக் கூறி திராவிட இயக்கங்கள் காவல் துறையில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.