ஈப்போ – கடந்த 40 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இழுபறி நிலையில் இருந்து வந்த புந்தோங் வட்டார மக்களின் வீட்டு நிலப்பட்டா பிரச்சனையைத் தீர்த்து வைத்து அவர்களுக்கு சொந்த நிலப்பட்டா உரிமம் வழங்கியுள்ள பேராக் மாநில அரசு, அனைத்து இனங்களுக்குமான சமநீதி நிலவ வேண்டும் என்ற அடிப்படையிலேயே அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டதாக அம்மாநில மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு தெரிவித்தார்.
நீண்ட காலப் போராட்டத்திற்குப் பின்னர் பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் நேரடி முயற்சி, தலையீட்டின் அடிப்படையில் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 124 பேர்களுக்கு பத்து காஜாவில் பெம்பன் வட்டாரத்தில் நிலப்பட்டா வழங்கப்பட்டு, அதற்கான உரிமத்திற்கான நிலவரியைச் செலுத்துவதற்கான பாரங்களை (பாரம் 5A) நேற்று திங்கட்கிழமை பத்து காஜாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மந்திரி பெசார் சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கினார். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்களாவர்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றும்போதே மந்திரி பெசார் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
“அனைத்து இனங்களுக்கும் சமநீதியோடு நடந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடும், பல தடைகள், சவால்களைச் சந்தித்த இந்த மக்களின் கஷ்டங்கள் இனியும் தொடரக் கூடாது என்ற நோக்கத்திலும் அரசாங்கம் இந்த நிலப்பட்டாக்களை வழங்குகிறது. அதிலும் மக்களின் சுமையைக் குறைக்கும் வண்ணம் மிகக் குறைந்த தொகையே நிலவரியாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது” என்றும் தனதுரையில் கூறிய அகமட் பைசால், எனவே, பாரங்களைப் பெற்றுக் கொண்ட அனைவரும் உடனடியாக அதனைப் பூர்த்தி செய்து நிர்ணயிக்கப்பட்ட நிலவரித் தொகையோடு சீக்கிரமாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தங்களின் நீண்டகாலப் போராட்டமும் காத்திருப்பும் நல்ல தீர்வோடு ஒரு முடிவுக்கு வந்திருப்பது தங்களுக்கு பெருமகிழ்ச்சியைத் தருவதாகவும், தங்கள் பிரச்சனைக்குத் தீர்வு கண்ட பேராக் மந்திரி பெசாருக்கும் பேராக் மாநில அரசாங்கத்திற்கும் தங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் நிலப்பட்டாக்களைப் பெறும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.