கோலாலம்பூர்: அண்மையில், பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட் மற்றும் பாஸ் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் இடையிலான சந்திப்பு, நாட்டின் அரசியல் நிலப்பரப்பை மாற்றும் என்ற ஊகத்தைத் தூண்டியது எல்லாம் ஒரு பொதுவான புரிதல் மட்டுமே என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.
டாக்டர் மகாதீர் யாரையும், எப்போதும் சந்திக்கும் சுதந்திரம் உண்டு. அச்சந்திப்பானது சாதாரணமான ஒன்று என்று அவர் கூறினார்.
“(நாட்டின் அரசியல் நிலப்பரப்பை மாற்றும்) என்பது பொதுவான விளக்கம். பிரதமர் கூறியவரை அது ஒரு பொதுவான சந்திப்பு.” என்று இன்று வியாழக்கிழமை கூறினார்.
அவரும் அப்துல் ஹாடியைச் சந்திக்க வாய்ப்புகள் இருக்கிறதா என்று கேட்டபோது, தாம் யாரையும் சந்திக்கத் தயாராக இருப்பதாக அன்வார் கூறினார்.
“யாரையும் சந்திப்பதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. நான் யாருடனும் தனிப்பட்ட பகை கொள்வதில்லை” என்று அவர் கூறினார்.
அண்மையில், டாக்டர் மகாதீர், அப்துல் ஹாடி மற்றும் திரெங்கானு முதலமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சம்சூரி மொக்தார் ஆகியோரின் வருகையை ஏற்றதாக புகைப்படங்கள் பரவலாகப் பகிரப்பட்டன.