டாவோஸ்: உலகளாவிய பருவநிலை பாதுகாப்பை உறுதிபடுத்துவதில் வாழ்வா அல்லது சாவா என்ற நிலைக்கு உலக மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.
இங்கு நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தில் பேசிய ஏஞ்சலா மெர்கல், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் 2015-இன் இலக்குகளை நிர்ணயித்து செயல்பட ஓர் அழுத்தம் உள்ளது என்று தெரிவித்தார்.
பருவநிலை மாற்றத்தை மறுத்தவர்களுக்கும் அதை சமாளிக்க போராடுபவர்களுக்கும் இடையிலான மோதல் விரைவில் தீர்க்கப்படும் என்றும் மெர்கல் நம்புவதாகக் குறிப்பிட்டார்.
“நாங்கள் எவ்வளவு கடினமாக இருந்தாலும், மிகவும் சர்ச்சைக்குரிய குழுக்களுடன் கூட தகவல்களை பரிமாறிக்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வணிக ஒப்பந்தங்கள் குறித்தும், பிரிட்டன் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்ற பிரெக்சிட் குறித்த தனது கருத்துக்கள் குறித்தும் மேர்க்கெல் பேசினார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது அப்பகுதியின் வளர்ச்சிக்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்று அவர் நம்புகிறார்.
“வருத்தமாக இருந்தாலும், பிரிட்டனின் விலகல் ஐரோப்பா தன்னை நிரூபித்துக் கொள்ள ஓர் ஊக்கமாகும்” என்று அவர் மேலும் கூறினார்.