சென்னை: தந்தை பெரியார் தொடர்பாக சர்ச்சையாகப் பேசிய நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக திராவிட இயக்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், அதற்காக தாம் மன்னிப்புக் கேட்கப்போவதில்லை என ரஜினிகாந்த் குறிப்பிட்டிருந்தது பல்வேறு விமர்சனங்களுக்கு வித்திட்டது.
இதனிடையே, அவருக்கு எதிராக காவல் துறையில் வழக்குத் தொடரப்பட்டது.
அண்மையில், துக்ளக் விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த், 1971-ஆம் ஆண்டு பெரியார் தலைமையில் நடந்த ஒரு பேரணியில் கடவுள் ராம் மற்றும் சீதாவின் உருவப் படங்கள் மற்றும் சிலைகள் ஆடைகளற்ற நிலையில் ஏந்திச் செல்லப்பட்டதாகக் கூறினார்.
மேலும், முரசொலி வைத்திருப்பவர்களை, திமுக காரர்கள் என்றும், துக்ளக் வைத்திருப்பவர்களை அறிவாளிகள் என்றும் கூறுவார்கள் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இக்கருத்துகளுக்கு திராவிட இயக்கங்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக ரஜினிகாந்த் நிபத்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராட்டங்கள் நடந்தன.
இதனிடையே, கோவை நகர திராவிடர் விடுதலை கழகம் சார்பில் நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி இராஜமாணிக்கம் தலைமையிலான அமர்வு, புகார் கொடுத்த 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தை அணுகியது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்த விவகாரத்தை விசாரிப்பதற்கு காவல் துறைக்கு போதுமான கால அவகாசத்தை அளிக்காது செயல்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் பெறப்பட்ட நிலையில், நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.