பெய்ஜிங் – கொரனாவைரஸ் தாக்குதலால் சீனாவில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 41-ஆக உயர்ந்திருக்கிறது. இந்த வைரஸ் தாக்குதலால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 1,000-ஆக உயர்ந்திருக்கிறது.இதற்கிடையில் கேரளா, ஹைதராபாத், மும்பை மருத்துவமனைகளில் 11 பேர்கள் கொரனா வைரஸ் பீடிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் கண்காணிக்கப்படுகிறார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சீனாவில் 11 மில்லியன் மக்களைக் கொண்ட வுஹான் நகரே மூடப்பட்டுஅங்கிருந்து யாரும் வெளியேற முடியாது – நகருக்குள்ளும் யாரும் வரமுடியாது என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. 7 மில்லியன் மக்களைக் கொண்ட வுஹானின் அண்டை நகரான ஹூவாங்காங் நகரும் இதே போன்ற பாதிப்பை எதிர்நோக்கியிருக்கிறது.
இன்று முதல் சீனா தனது முக்கிய சுற்றுலாத் தலங்களை மூடியுள்ளது. ஆலயங்கள், ஷங்காய் டிஸ்னிலேண்ட், மேக்டொனால்ட்ஸ் உணவகங்கள், சீனாவின் மிக முக்கிய சுற்றுலா மையமான சீனப் பெருஞ்சுவர் ஆகியவற்றை மூடுவதற்கு சீனா உத்தரவிட்டிருக்கிறது.
சீனாவின் 5 நகர்களில் தங்களின் கடைகள் மூடப்படுகிறது என மேக்டொனால்ட்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இந்த முடிவுகள் காரணமாக, கோடிக்கணக்கான டாலர்கள் வணிக இழப்புகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் 10 நகரங்களில் பொதுப்போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. சீனப் பெருநாளை முன்னிட்டு கோடிணக்கணக்கான மக்கள் பொதுப் போக்குவரத்து மூலம் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்புவது இதன் மூலம் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது.
இதற்கிடையில் கொரனா வைரஸ் ஐரோப்பாவுக்கும் பரவியிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.