பெய்ஜிங் – நாளை சனிக்கிழமை உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சீனப் பெருநாள் சீனர்களுக்கு மிக முக்கியமான நாள் மட்டுமல்ல! வணிகங்களுக்கும் மிக முக்கியமான நாள். வணிகங்களுக்கு கோடிக்கணக்கான டாலர்கள் விற்பனைகள் நடக்கும். தொடர்ச்சியாக வரும் விடுமுறைகளால், உணவகங்கள், சுற்றுலா மையங்கள் மக்களால் நிரம்பி வழியும்.
ஆனால், இந்த ஆண்டுக்கான சீனப் பெருநாள் சீனாவுக்கும் அதன் கோடிக்கணக்கான மக்களுக்கும் பெரும் தலையிடியாக உருவெடுத்திருக்கிறது. காரணம் கொரனா வைரஸ் கிருமி பரவி வருவதுதான்.
11 மில்லியன் மக்களைக் கொண்ட வுஹான் நகரே மூடப்பட்டுஅங்கிருந்து யாரும் வெளியேற முடியாது – நகருக்குள்ளும் யாரும் வரமுடியாது என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. 7 மில்லியன் மக்களைக் கொண்ட வுஹானின் அண்டை நகரான ஹூவாங்காங் நகரும் இதே போன்ற பாதிப்பை எதிர்நோக்கியிருக்கிறது.
அதைத் தொடர்ந்து, இன்று சீனா தனது முக்கிய சுற்றுலாத் தலங்களை மூடியுள்ளது. ஆலயங்கள், ஷங்காய் டிஸ்னிலேண்ட், மேக்டொனால்ட்ஸ் உணவகங்கள், சீனாவின் மிக முக்கிய சுற்றுலா மையமான சீனப் பெருஞ்சுவர் ஆகியவற்றை மூடுவதற்கு சீனா இன்று நடவடிக்கை எடுத்தது.
ஷங்காய் டிஸ்னிலேண்ட் தினமும் 100,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடிய இடவசதிகள் கொண்டது. கடந்த ஆண்டு சீனப் பெருநாளின்போது சீனப் பெருநாளுக்கான முதல் நாளில் ஷங்காய் டிஸ்னிலேண்டுக்கான அனைத்து டிக்கட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. ஆனால், இந்த ஆண்டு அந்த மையம் மூடப்பட்டிருக்கும் என்பதால் எத்தகைய வணிக இழப்பு என்பதை ஓரளவுக்கு நிர்ணயம் செய்து கொள்ளலாம்.
சீனாவின் 5 நகர்களில் தங்களின் கடைகள் மூடப்படுகிறது என மேக்டொனால்ட்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இந்த முடிவுகள் காரணமாக, கோடிக்கணக்கான டாலர்கள் வணிக இழப்புகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரனா வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது. 800 பேர்கள் பாதிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
10 நகரங்களில் பொதுப்போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. சீனப் பெருநாளை முன்னிட்டு கோடிணக்கணக்கான மக்கள் பொதுப் போக்குவரத்து மூலம் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்புவது இதன் மூலம் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது.
கொரனா வைரஸ் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை சீனாவில் அதிகமாக இருந்தாலும், இந்த வைரஸ் தாய்லாந்து, வியட்னாம், சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா, தைவான், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.