கோலாலம்பூர்: கொரொனாவைரஸ் தொற்று இருப்பதாக, கடந்த புதன்கிழமை சபாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு அந்நோய் பரவவில்லை என்று சுகாதாரத் துறைத் தலைவர் டத்தோ டாகடர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ஐஎம்எப்) அத்தனிநபரின் மீது நடத்திய சிகிச்சை மற்றும் விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் இந்த விஷயத்தை அவர் உறுதிப்படுத்தினார்.
முன்னதாக, மலேசியாவில் கொரொனாவைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நான்கு நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அவற்றில் மூன்று எதிர்மறையான முடிவுகளை வெளிபடுத்திய நிலையில், சபாவில் இந்த நபர் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.
அந்நபருக்கு கொரொனாவைரஸ் (என்சிஓவி) தொற்று அல்ல என்றும், மாறாக இன்ப்ளூயன்சா ‘ஏ’ காரணமாக அவர் இப்போது குணமடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, நாட்டில் கொரொனாவைரஸ் தொற்று ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் பதிவுகள் குறித்து தேசிய நெருக்கடி மற்றும் அவசரகால பதிலளிப்பு மையம் (சிபிஆர்சி) ஓர் அறிக்கையைப் பெற்றது.
இதையடுத்து, நான்கு நபர்களும் விரைந்து தனிமைப்படுத்தப்பட்டனர்.
கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் சீனாவில் வுஹான் நகரில் இந்த புதிய வகை கொரொனாவைரஸ் பரவத் தொடங்கியது. உலக சுகாதார அமைப்பு இது ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் என்பதை உறுதிப்படுத்தியது.
பெய்ஜிங், ஷாங்காய், குவாங்டாங் மற்றும் தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா, தைவான் மற்றும் அமெரிக்கா உட்பட வுஹான் நகருக்கு வெளியே இந்நோய் பரவியிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று வெள்ளிக்கிழமை நிலவரப்படி 830 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 25 இறப்புகள் பதிவாகியுள்ளதாக சீன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.