கோலாலம்பூர்: சீன அரசாங்கம் அனுமதித்தால் 2019 கொரொனாவைரஸ் பாதிக்கப்பட்டுள்ள பகுதியிலிருந்து மலேசியா தனது மக்களை மீண்டும் அழைத்து வருவதற்கு தயாராக இருப்பதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
இந்த நோக்கத்திற்காக, வெளியுறவு அமைச்சகம் மூலம் மலேசிய அரசாங்கம் சீன அரசாங்கத்துடன் விரைவில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
“அவர்கள் (மலேசியர்கள்) இப்போது வுஹானை விட்டு வெளியேற முடியாது, ஆனால் சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம், இதனால் நோய்வாய்ப்பட்ட மலேசியர்கள் மலேசியாவுக்கு திரும்ப முடியும்” என்று அவர் இன்று புதன்கிழமை இங்கு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
டாக்டர் மகாதீரின் கூற்றுப்படி, வுஹானில் தற்போது 78 மலேசியர்கள் உள்ளனர்.
சீன அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டால், அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கு முன்னர் கொரொனாவைரஸால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முதலில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.