Home One Line P1 36 மணிநேரம் இடைவிடாது வயலின் இசைத்த சாதனையாளர் விஸ்வநாத் – கோலாலம்பூரில் கச்சேரி

36 மணிநேரம் இடைவிடாது வயலின் இசைத்த சாதனையாளர் விஸ்வநாத் – கோலாலம்பூரில் கச்சேரி

498
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இந்தியாவின் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற வயலின் இசைக் கலைஞரான எம்.எஸ்.விஸ்வநாத் முதன் முறையாக கோலாலம்பூரில் தனது இசைக் கச்சேரியை எதிர்வரும் ஜனவரி 31 (வெள்ளிக்கிழமை) மற்றும் பிப்ரவரி 1 (சனிக்கிழமை) தேதிகளில் கேஎல் ஜாஸ் & ஆர்ட்ஸ் சென்டரில் (KL Jazz & Arts Centre) நடத்துகிறார்.

எண்: 1, லோரோங் காப்பார், ஜாலான் சைட் புத்ரா (சீபூத்தே), 58000 கோலாலம்பூர் என்ற முகவரியில் கேஎல் ஜாஸ் & ஆர்ட்ஸ் சென்டர் அமைந்திருக்கிறது.

மேற்கத்திய இசை மட்டுமின்றி கர்நாடக இசையையும் வயலின் வழி இசைப்பதில் திறன்பெற்ற விஸ்வநாத் இடைவிடாது 36 மணி நேரம் வயலின் இசைத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சாதனையாளர் ஆவார்.

#TamilSchoolmychoice

விஸ்வநாத்துக்கு முன்னர் அர்மேனியா நாட்டைச் சேர்ந்த மாடோயென் என்பவர்தான் 33 மணி நேரம் 2 நிமிடங்கள் 41 நிமிடங்கள் இடைவிடாது வயலின் இசைத்து உலக சாதனையை நிகழ்த்தினார். விஸ்வநாதனோ 36 மணிநேரம் இடைவிடாது வயலின் இசைத்ததோடு, அந்த நேரத்தில் விவால்டி, பாச், பீத்தோவன் போன்றவர்களின் மேற்கத்திய இசைக் குறிப்புகளை மட்டுமின்றி தியாகராஜ கீர்த்தனைகளையும் இசைத்து சாதனை புரிந்தார்.

தனது 15-வது வயதில் வயலின் கற்றுக் கொள்ள ஆரம்பித்த விஸ்வநாத் இசைக் குடும்பத்தைப் பின்னணியாகக் கொண்டவரல்ல. இருப்பினும், இசையையே தனது ஆர்வமாகக் கொண்டு தொழில் ரீதியான வயலின் இசைக் கலைஞராக மாறினார்.

கேரளாவின் திரிபுனித்ராவில் அமைந்துள்ள பெருமை வாய்ந்த ஆர்எல்வி கல்லூரியில் பட்டம் பெற்ற (RLV College of Fine Arts in Tripunithura) விஸ்வநாத் கர்நாடக வயலின் இசையில் தனது முதுகலைப் பட்டத்தையும் முடித்திருக்கிறார்.

பின்னர் மேற்கத்திய வயலின் இசையையும் கற்றுத் தேர்ந்த விஸ்வநாத் இலண்டன் டிரினிடி கல்லூரியிலும் 8-வது கிரேட் மற்றும் டிப்ளமா கல்வியை நிறைவு செய்தார்.

தனது சொந்த முயற்சியில் செல்லோ (Cello) இசைக் கருவியையும் இசைக்கக் கற்றுத் தேர்ந்தவர் விஸ்வநாத்.

இந்தியாவின் மாபெரும் இசைக் கலைஞர்களான கே.ஜே.யேசுதாஸ், ஹரிஹரன், விஜய் யேசுதாஸ், ஸ்டீபன் தேவாசி போன்றவர்களோடும் வயலின் இசையைப் படைத்திருக்கும் விஸ்வநாத் கனடா, இத்தாலி போன்ற நாடுகளின் பிரபல சிம்பொனி இசைக் குழுக்களுடனும், இந்தியாவின் பல்வேறு முன்னணி இசைக் குழுக்களுடனும் பணியாற்றிய அனுபவம் கொண்டவராவார்.

இந்தியாவின் பல்வேறு சினிமா இசையமைப்பாளர்களுக்கும் வயலின் இசைத்திருக்கும் விஸ்வநாத் பல்வேறு மொழிகளில் பிரபலமான பல பாடல்களுக்கு இசைப்பங்களிப்பு நிகழ்த்தியிருக்கிறார்.

ரிதுராகாஸ் என்ற ஆறுபேர் கொண்ட சொந்த இசைக்குழுவையும் தனது நண்பர்களுடன் அவர் நடத்தி வருகிறார். பல்வேறு போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற்ற அந்த இசைக் குழு, சொந்த இசைத் தொகுப்புகளையும் (ஆல்பம்) வெளியிட்டிருக்கிறது. இந்த இசைத் தொகுப்புகள் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானவையாகும்.

தனது இசைத் திறனும், கலையும் மற்றவர்களுக்கும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கம் கொண்ட விஸ்வநாத் இசைக் கல்லூரிகளிலும், இணையம் வழியும் பயிலும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இசை வகுப்புகள் நடத்தி வருகிறார். அண்மையில் தனது மாணவர்கள் 40 பேர்களை ஒருங்கிணைத்து தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றையும் படைத்தார்.

தற்போது 7 தந்திக் கம்பிகள் கொண்ட, நவீன மின்வயலினைப் பயன்படுத்தும் இசைக் கலைஞராகத் திகழ்கிறார் விஸ்வநாத். இத்தகைய அதி நவீன மின்வயலினை (7 string Mark Wood Viper Electric violin) இந்தியாவிலேயே முதன் முறையாகப் பயன்படுத்துபவராக – அநேகமாக இந்தியாவில் பயன்படுத்தும் ஒரே கலைஞராக – விஸ்வநாத் கருதப்படுகிறார்.

உலகம் முழுவதும் தனிக் கச்சேரிகள் நடத்தும் பயணத்தில் ஈடுபட்டிருக்கும் விஸ்வநாத் அந்த இசைப் பயணத்தின் ஒரு பகுதியாக தற்போது கோலாலம்பூரிலும் மேற்குறிப்பிட்ட தேதிகளில் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.

தனது இரசிகர்களுக்கு தனது இசைக் கலையை நேரடியாகப் படைக்க வேண்டும் என்ற ஆர்வத்திலும், முயற்சியிலும் ஈடுபட்டிருக்கும் விஸ்வநாத் தனது வயலின் இசையை புதிய தளங்களுக்குக் கொண்டு செல்லும் முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்.

விஸ்வநாத்தின் கோலாலம்பூர் நிகழ்ச்சியில் அவருடன் மேளங்கள் (டிரம்) இசைப்பதில் திறன்பெற்ற ஷியாஸ் கோயா (Shiyas  Koya) என்பவர் இணைகிறார். இவரும் 16 வயது முதல் மேளங்கள் இசைத்து வருவதோடு, இலண்டன் டிரினிடி கல்லூரியில் 8-வது கிரேட் சான்றிதழ் பெற்றவராவார். இந்தியாவிலும், அனைத்துலக அளவிலும் பல்வேறு இசைக் குழுக்களில் பணியாற்றிய அனுபவமும் கொண்டவர் ஷியாஸ் கோயா.

பல இசைத் தொகுப்புகளில் (ஆல்பம்) பங்கு பெற்றிருக்கும் ஷியாஸ் கேரளா முழுவதும் சுமார் 350 மாணவர்களுக்கு மேளம் இசைப்பதைக் கற்பித்து வருகிறார்.

ரிதுராகாஸ் இசைக் குழுவிலும் இடம் பெற்றிருக்கும் ஷியாஸ் அந்தக் குழுவுடன் பல கச்சேரிகளில் பங்கு பெற்றிருக்கிறார்.

விஸ்வநாத்தின் வயலின் நிகழ்ச்சி விவரங்கள்

எதிர்வரும் 31 ஜனவரி மற்றும் 1 பிப்ரவரி ஆகிய இரு தேதிகளில் இரவு 9.00 மணி முதல் 11.00 மணிவரை இந்த வயலின் நிகழ்ச்சி நடைபெறும்.மூன்றாவது நிகழ்ச்சி பிப்ரவரி 2-ஆம் தேதி நடைபெறும் என்றாலும், அந்த நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டுகள் அனைத்தும் முன்கூட்டியே முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.

எனவே, ஜனவரி 31, பிப்ரவரி 1 என இரு தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மட்டுமே ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ள முடியும்.

கலந்து கொள்ள விரும்புபவர்கள் 012-5717759 என்ற வாட்ஸ்எப் எண்ணின் மூலம் முன்கூட்டியே நுழைவுச் சீட்டுகளை முன்பதிவு செய்யவேண்டும்.

முன்கூட்டியே முன்பதிவு செய்பவர்களுக்கு நுழைவுக் கட்டணம் 50 ரிங்கிட்டாகும். நிகழ்ச்சி நடைபெறும் அன்றைய தினத்தில் அங்கேயே நுழைவுக் கட்டணம் பெற விரும்புபவர்களுக்கான கட்டணம் 80 ரிங்கிட்டாகும்.

மேலும் விவரங்கள் பெற கீழ்க்காணும் வாட்ஸ்எப் கைத்தொலைபேசி எண்ணிலோ அல்லது இணையத் தளத்திலோ தொடர்பு கொள்ளலாம்;

WhatsApp to 012-5717759

Website: www.klindablue.com.my