Home One Line P1 “நம்மிடையே வாழ்ந்த வரலாற்றுச் சாதனைப் பெண்மணியை இழந்தோம்” – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அனுதாபம்

“நம்மிடையே வாழ்ந்த வரலாற்றுச் சாதனைப் பெண்மணியை இழந்தோம்” – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அனுதாபம்

854
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் காலமான தோபுவான் உமா சம்பந்தன் அவர்களின் மறைவை முன்னிட்டு மஇகாவின் தேசியத் தலைவரும் நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் வெளியிட்ட அனுதாபச் செய்தியில் “நமது மலேசியர் இந்தியர் காங்கிரசை இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் மாபெரும் அரசியல் கட்சியாக வளர்த்தெடுத்ததிலும், அன்றைய மலாயாவுக்கு பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் வாங்கித் தர முன்னிருந்த போராட்டம் நடத்திய முன்னோடித் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்த அமரர் துன் சம்பந்தனாரின் வாழ்க்கைத் துணைவியார் தோபுவான் உமா சம்பந்தன் மறைந்தது இந்திய சமுதாயத்திற்கான பேரிழப்பாகும்”  என்று புகழாரம் சூட்டினார்.

“இந்திய சமுதாயத்தைப் பிரதிநிதிக்கும் அமைச்சராகவும், மஇகாவின் தேசியத் தலைவராக 18 ஆண்டுகள் அரசியல் பயணத்தையும் நடத்திய துன் சம்பந்தனாரின் வாழ்க்கையில் இணைபிரியாத அங்கமாகவும், துன் அவர்களின் சமுதாயப் பணிகளில் தோள் கொடுத்து உறுதுணையாக நின்றவர் என்ற முறையிலும் ஒரு வரலாற்றுப் பெண்மணியாகவும் திகழ்ந்தவர் தோபுவான் அவர்கள். தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் தோற்றத்திலும், வளர்ச்சியிலும் தனது உழைப்பையும் வழங்கியவர் தோபுவான். பின்னர் அந்த மாபெரும் கூட்டுறவு இயக்கத்தில் இயக்குநர் வாரியத்தில் இடம் பெற்று தனது சேவைகளையும் அவர் வழங்கினார்” என்றும் விக்னேஸ்வரன் தனது இரங்கல் செய்தியில் மேலும் தெரிவித்தார்.

“துன் அவர்களின் மறைவுக்குப் பின்னரும், பல்வேறு இந்திய சமுதாய நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று மக்களோடு மக்களாக, எளிமையாகக் கலந்து பழகியவர் என்ற முறையில் அனைவரின் மரியாதையையும் பெற்றவர் தோபுவான். மலாயா சுதந்திரம் அடைந்த பின்னணி, அதனுடன் ஒட்டிய மஇகாவின் வரலாறு, இந்தியர்களின் பங்களிப்பு போன்ற அம்சங்களை நேரடியாகக் கண்டவர் என்ற முறையில் வரலாற்றுபூர்வமாக எடுத்துக் கூறக் கூடிய மூத்தவராக நம்மிடையே வாழ்ந்தவர் இன்று நம்மை விட்டுப் பிரிந்தது நமக்கெல்லாம் பேரிழப்பாகும்” என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“காலங்கள் கடந்தாலும், அவரது சமுதாயப் பங்களிப்பும், சேவைகளும் என்றுமே இந்திய சமுதாயத்தால் நினைவு கூரப்படும். அவரது வரலாற்று நினைவுகளை மஇகாவும் எப்போதும் நினைவில் நிறுத்தி போற்றி வரும். தோபுவான் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு மஇகாவின் சார்பிலும் எனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு,  அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்றும் விக்னேஸ்வரன் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.