சுங்கை சிப்புட் – மஇகாவின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்த நகரம் சுங்கை சிப்புட். மஇகாவின் 5-வது தேசியத் தலைவராகத் திகழ்ந்த துன் வீ.தி.சம்பந்தனின் பூர்வீக நகராகத் திகழ்ந்ததோடு மட்டுமின்றி, அவரைப் பல தவணைகளுக்குப் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுத்து அனுப்பிய பெருமை வாய்ந்தது சுங்கை சுப்புட்.
அதன் பின்னர் மஇகாவின் 7-வது தேசியத் தலைவர் துன் சாமிவேலுவையும் பல தவணைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்த பெருமை வாய்ந்ததும் இதே சுங்கை சிப்புட் நகர்தான்.
அந்த நகரையே இன்று சோகம் சூழ்ந்து கொண்டது. துன் சம்பந்தனின் துணைவியார் தோபுவான் உமா சம்பந்தன் தனது 90-வது வயதில் கடந்த வெள்ளிக்கிழமை ஜனவரி 31-ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அவரது நல்லுடல் சுங்கை சிப்புட்டுக்குக் கொண்டுவரப்பட்டு, துன் சம்பந்தனின் பூர்வீக இல்லத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சுங்கை சிப்புட்டுக்கு நேரடியாக வந்து தோபுவானுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதோடு, அன்னாரின் இறுதிச் சடங்குகளிலும் கலந்து கொண்டார்.
அவரோடு, மற்ற மஇகா தலைவர்களும் இணைந்து கொண்டு தோபுவானுக்கு தங்களின் இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.
சுங்கை சிப்புட்டில் தோபுவானின் இறுதிச் சடங்குகளின்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய விக்னேஸ்வரன் “தோபுவான் ஒரு முன்னாள் அமைச்சரும் சுதந்திரப் போராட்ட வீரருமான துன் சம்பந்தனின் மனைவி என்பதால் மட்டும் பெருமை பெற்றவர் அல்ல. அவரது சொந்த சாதனைகளும், சேவைகளும்கூட பெருமை வாய்ந்தவைதான். தனது கணவர் இருந்த வரையில் அவரோடு இணைந்து சமூகப் பணியாற்றியவர், துன் அவர்களின் மறைவுக்குப் பின்னர், தனது சொந்த அறிவாற்றலைக் கொண்டு, இந்திய சமுதாயத்திற்கு குறிப்பாக மகளிர் சமூகத்திற்கு பெரும் சேவைகள் ஆற்றியிருக்கிறார். தனது தள்ளாத வயதிலும் பல நிகழ்ச்சிகளுக்கு சென்று கலந்து கொண்டு, தாய்மை உணர்வோடு சமூகப் பணியாற்றியிருக்கிறார். அதனால்தான் அவரை இந்திய சமூகத்தின் ஒரு மூத்த தாய் என்ற மரியாதையோடு அவருக்கு சோகத்துடன் இறுதி அஞ்சலி செலுத்துகிறோம்” என்று கூறினார்.
தோபுவானின் இறுதிச் சடங்குகளின்போது எடுக்கப்பட்ட படக் காட்சிகளை இங்கே காணலாம்: