கோலாலம்பூர் – மலேசியாவின் முதல் தமிழ் ராப் போட்டியை (RAP-Porkalam) 22 பிப்ரவரி முதல் இணையதளம் வாயிலாக, ஆஸ்ட்ரோ உலகம், ஆஸ்ட்ரோ கோ மற்றும் தொலைக்காட்சியில் வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து பார்த்து மகிழலாம்.
இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற ராப் போர்க்களம் (RAP Porkalam), மலேசியாவின் முதல் தமிழ் ராப் போட்டியின் நேர்முகத்தேர்வில் பங்கேற்பாளர்களிடையே நிகழ்ந்த கடுமையான போட்டிக்குப் பின்னர், சுமார் 16 திறமைமிக்க ராப் போட்டியாளர்கள் முதல் சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர்.
ஆஸ்ட்ரோ உலகம் வலைத்தளம் வழியாக சிறந்த 16 போட்டியாளர்களில் தங்களுக்கு விருப்பானவர்களுக்கு மலேசியர்கள் ஒரு நாளைக்கு 50 வாக்குகள் என்ற விகிதத்தில் வாக்களிக்கலாம்.
முதல் சுற்றுக்கான வாக்களிப்பு தற்பொழுது திறக்கப்பட்டிருக்கின்ற வேளையில் மலேசியர்கள் பிப்ரவரி 4 வரை வாக்களிக்கலாம். இரண்டாம் சுற்றுக்கான வாக்களிப்பு 19 முதல் 25 பிப்ரவரி வரையிலும்; மற்றும் Wild Card சுற்றுக்கான வாக்களிப்பு 18 முதல் 24 மார்ச் வரை திறக்கப்படும் வேளையில் ரசிகர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம்.
RAP Porkalam -போட்டி நிகழ்ச்சியில் முதல் நிலையில் வாகை சூடுபவர் சுமார் 5000 ரிங்கிட் ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வதோடு சோனி மியூசிக் மலேசியாவுடன் (Sony Music Malaysia) இணைந்து தனது முதல் இசைத் தொகுப்பை (சிங்கள்) வெளியீடு செய்யும் ஓர் அற்புதமான வாய்ப்பைப் பெறுவார். அதே வேளையில், இரண்டாம் நிலையில் வெற்றி பெறுபவர் சுமார் 2000 ரிங்கிட் ரொக்கப் பரிசை வீட்டிற்கு எடுத்துச் செல்வதோடு அவரது விருப்பத்திற்கு இணங்க சோனி மியூசிக் மலேசியாவுடன் இணைந்து தனது முதல் இசைத் தொகுப்பை வெளியீடு செய்யும் வாய்ப்பு வழங்கப்படும்.
ஆஸ்ட்ரோவின் இந்திய அலைவரிசை வியாபாரத் துணைத் தலைவர் மார்க் லூர்தஸ் கூறுகையில், மலேசியாவின் முதல் தமிழ் ராப் போட்டியில், பிரபல உள்ளூர் ராப்பர் எம்ஸி ஜெஸ் வழிகாட்டவிருக்கும் முதல் 16 திறன்மிக்க போட்டியாளர்களை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்வதோடு பேரின்பமும் அடைகிறோம் என்று தெரிவித்தார்.
“உள்ளூர் சமூகத்தையும் மலேசிய தமிழ் இசைத் துறையையும் மேம்படுத்துவதோடு வளரச்செய்யவும் ராப் போர்க்களம் ஒரு சிறந்த அடித்தளமாக இருக்கும் என்பதை நாங்கள் பெரிதும் நம்புகிறோம். நேர்முகத்தேர்வின்போது அளவற்ற ஆதரவு வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நாங்கள் தலை வணங்குவதோடு நன்றி மலர்களையும் சமர்ப்பிக்கின்றோம், மேலும் மலேசியர்களிடமிருந்து அதீத ஆதரவை ராப் போர்க்களம் தொடர்ந்து பெறும் என்பதை நாங்கள் பெரிதும் எதிர்ப்பாரக்கிறோம்” என்றும் அவர் மேலும் கூறினார்.
தராகை என்ற ராப் போர்க்களத்தின் 24 வயது போட்டியாளர் கூறுகையில்,”ராப் மீதான காதல் மற்றும் தாக்கம் எனக்குள் எப்போதும் இருந்ததுண்டு, பாடல்களை இயற்றுவது மற்றும் பாடல் வரிகளை எழுதுவது போன்ற நடவடிக்கைகளில் எப்போதும் நான் ஆர்வம் காட்டி வந்தேன். அது மட்டுமின்றி ஒரு நாள் இத்துறையில் இளம் பெண்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதே என் அவா” என்றார்.
நரேன் ஜாக் என்ற 20 வயது போட்டியாளர் கூறுகையில்,” முதல் பாடலை 16 வயதிலும், முழு நீள மிக்ஸ்டேப்பை 18 வயதிலும் நான் பதிவு செய்தேன். ராப்பராக மகுடம் சூட வேண்டும் என்ற எங்களைப் போன்ற இளைய தலைமுறையினரின் கனவை நினைவாக்க ராப் போர்க்களம் ஒரு தலைச்சிறந்த தளமாக அமைகின்றது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை” என்றார்.
ராப் போர்க்களம் நிகழ்ச்சியை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் பிப்ரவரி 22 முதல் ஒவ்வொரு சனிக்கிழமைகளில், இரவு 7 மணிக்கு ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கம் மற்றும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் செய்ய முடியும் என்பதோடு, விண்மீன் துல்லிய ஒளிபரப்பிலும் (HD – அலைவரிசை 231) கண்டு களிக்கலாம்.
மேல் விவரங்களுக்கு, ஆஸ்ட்ரோ உலகம் சமூக வலைத்தளங்களை வலம் வாருங்கள்: Facebook | Instagram