Home One Line P1 “பக்தியோடும் சமய நெறிமுறைகளோடும் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன் தைப்பூசத் திருநாள் வாழ்த்து

“பக்தியோடும் சமய நெறிமுறைகளோடும் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன் தைப்பூசத் திருநாள் வாழ்த்து

994
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இந்துக்களின் பக்தியை எடுத்துரைக்கும் முக்கிய சமய விழாவாக திகழும் தைப்பூசத் திருவிழாவை இந்துப் பெருமக்கள் பக்தியோடும் சமய நெறிமுறைகளோடும் ஒரு சமய விழாவாக கொண்டாடுவோம் என்று ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

“வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை,
குகனுண்டு குறைவே இல்லை”

என்னும் நம்பிக்கையை நமக்குள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் முருகப் பெருமானின் புகழ்பரப்ப பக்தியையும் சமய நெறிமுறைகளையும் நாம் பின்பற்றி தைப்பூசத்தைக் கொண்டாட வேண்டும் என்றும் மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான விக்னேஸ்வரன் கூறினார்.

#TamilSchoolmychoice

“தைப்பூசம் என்பது நமது சமய விழா. முருகப்பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா. “யாமிருக்க பயம் ஏன்” என்று சொல்லும் முருகப் பெருமானின் மந்திரச் சொல்லில் கட்டுண்டு அவன் பெயரை தரணியெங்கும் புகழ் பரப்பிக் கொண்டிருக்கும் ஒரு உன்னத விழாதான் தைப்பூசம்” என்று விக்னேஸ்வரன் தைப்பூசத்தை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

“நாடு தழுவிய நிலையில் முருகன் ஆலயங்களில் தைப்பூசத் திருவிழா பிப்ரவரி 8-ஆம் நாள் சனிக்கிழமை வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது.இதில் குறிப்பாக பத்துமலை திருத்தலம், பினாங்கு தண்ணீர்மலை பாலதண்டாயுதபாணி ஆலயம், ஈப்போ கல்லுமலை ஆலயம், சுங்கைப்பட்டாணி முருகன் ஆலயம், ஜோகூர் தண்டாயுதபாணி ஆலயம் ஆகிய ஆலயங்களில் தைப்பூசத் திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படவுள்ளன. முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும் இந்த தைப்பூசத் திருவிழாவை இந்துக்கள் நேர்த்தியான முறையில் கொண்டாட வேண்டும். இந்து சமய விழா இப்படித்தான் இருக்க வேண்டும் என்னும் நெறிமுறைகள் நமது இந்து மதத்தில் வகுக்கப்பட்டுள்ளது. ஆகையால், மலேசிய இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையோடு ஒன்றிணைந்து பக்தியோடும் சமய நெறிமுறைகளோடும் தைப்பூசத் திருவிழாவைக் கொண்டாட வேண்டும்” என்றும் விக்னேஸ்வரன் தனது வாழ்த்துச் செய்தியில் கேட்டுக் கொண்டார்.