Home One Line P1 “அன்வாருக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் – ஆனால் நாடாளுமன்றமே இறுதி முடிவு செய்யும்” – மகாதீர்

“அன்வாருக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் – ஆனால் நாடாளுமன்றமே இறுதி முடிவு செய்யும்” – மகாதீர்

872
0
SHARE
Ad
அன்வார் – மகாதீர் கோப்புப் படம்

கோலாலம்பூர் – துன் மகாதீர் தலைமையிலான புதிய கூட்டணி அரசாங்கம் அமையும் என்ற ஆரூடங்கள் தீ போல் பரவி வரும் வேளையில் “அன்வாருக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன். ஆனால், இறுதி முடிவு நாடாளுமன்றத்தின் கையில்தான் உள்ளது” என மகாதீர் தெரிவித்துள்ளார்.

“மலாயா போஸ்ட்” என்ற ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் போது “நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்ட ஒரு கட்சியிலிருந்து ஒருவர் பிரதமராக முன்மொழியப்பட்டாலும், அந்தக் கட்சியின் பெரும்பான்மை ஆதரவை அவர் பெற முடியாவிட்டால் அவரால் பிரதமராக முடியாது. நான் பிரதமராக இருப்பது நாடாளுமன்றத்தில் இருக்கும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவால்தான். அப்படியே நான் பதவி விலக மறுத்தாலும் எனக்கு எதிராக பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னை நிராகரித்தால் என்னால் பிரதமராகத் தொடர முடியாது” என்றும் மகாதீர் விளக்கினார்.

தற்போது மகாதீரின் பெர்சாத்து, அமானா, சரவாக்கின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அம்னோ, ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தைத் தோற்றுவிக்கும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படும் வேளையில் மகாதீர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

47 உறுப்பினர்களுடன் நாடாளுமன்றத்தில் வீற்றிருக்கும் பிகேஆர் கட்சிக்குத் துணையாக இருக்கும் ஜசெக 42 உறுப்பினர்களையும், பெர்சாத்து 26 உறுப்பினர்களையும் அமானா 11 உறுப்பினர்களையும், சபாவின் வாரிசான் 9 உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் இணைந்தால் 135 உறுப்பினர்கள் நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

மொத்தமுள்ள 222 நாடாளுமன்ற இடங்களில் பெரும்பான்மையைப் பெற 111 இடங்களே ஒரு பிரதமர் வேட்பாளருக்குத் தேவை.

ஆனால், பிகேஆர் கட்சியின் 47 உறுப்பினர்களின் ஆதரவையும் அன்வாரால் பெற முடியுமா என்ற கேள்வி அடிக்கடி எழுப்பப்படுகிறது. அஸ்மின் அலி, சுரைடா கமாருடின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அன்வாருக்கு எதிராக வெளிப்படையான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள் – மகாதீர் பிரதமராகத் தொடர ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

பாஸ், அம்னோ இரண்டும் அன்வாரை விட மகாதீர் பிரதமராகத் தொடர்வதையே விரும்புகின்றன என பகிரங்கமாகத் தெரிவித்துள்ளன.

தனது நேர்காணலின்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருந்தால் முழுத் தவணைக்கும் பிரதமராகத் தொடர்வீர்களா எனக் கேட்கக் கேட்கப்பட்ட கேள்விக்கு “எனக்குத் தெரியவில்லை” என மகாதீர் சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.