கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கம், அப்போதைய பிரதமர் நஜிப் ரசாக் மூலம் சவுதி அரேபியாவிடம் இருந்து நன்கொடைகளை கோரியதாக முன்னாள் பிரதமர் துறை அமைச்சர் ஜாமில் கிர் பஹாரோம் இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மலேசியா, நஜிப் மூலம் நன்கொடைகளை கேட்டதா அல்லது சவுதி சலுகை வழங்கியதா என்று அரசு துணை வழக்கறிஞர் சிதம்பரத்தின் கேள்விக்கு பதில் கூறிய அவர்,
“நாங்கள் அதை ஒரு கோரிக்கையாக வைத்தோம்.” என்று தெரிவித்தார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி உதவி கோரிக்கை ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட நன்கொடை என்று கூறப்படுவது மலேசியர்களிடமிருந்து மறைக்கப்பட்டதை ஜாமில் ஒப்புக் கொண்டார்.
எவ்வாறாயினும், 2010-ஆம் ஆண்டு ஜனவரியில் அப்துல்லா மன்னர் நஜிப்பிற்கு நன்கொடை அளிப்பதாக உறுதியளித்திருந்தால், அது மலேசிய தேர்தலில் சவுதி தலையீடு இருந்ததாகக் கூறலாம் என்ற சிதம்பரத்தின் கூற்றுக்கு ஜாமில் எதிர்ப்பு தெரிவித்தார்.