Home One Line P2 ஆஸ்கார் விருதுகள் : உலக அளவில் நேரலையாகப் பார்க்கும் ஆர்வம் குறைகிறது

ஆஸ்கார் விருதுகள் : உலக அளவில் நேரலையாகப் பார்க்கும் ஆர்வம் குறைகிறது

842
0
SHARE
Ad

ஹாலிவுட் – ஒரு காலத்தில் உலக அளவில் அதிகம் பார்க்கப்படும் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியாக திகழ்ந்தது ஆஸ்கார் விருதளிப்பு நிகழ்ச்சி.

ஆனால் அண்மைய சில ஆண்டுகளாக ஆஸ்கார் விருதுகள் நிகழ்ச்சி தனது மவுசை இழந்து வருவதோடு, அதை ஆர்வத்தோடு நேரலையாகப் பார்த்து மகிழ்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்து வருகிறது.

இதன் காரணமாக, வணிக நிறுவனங்களும் ஆஸ்கார் விருதுகளின்போது தங்களின் விளம்பரங்களைக் காட்ட அதிக அளவில் ஆர்வம் காட்டவில்லை.

#TamilSchoolmychoice

அதற்கேற்ப நேற்று திங்கட்கிழமை காலையில் (அமெரிக்க நேரப்படி பிப்ரவரி 9 ஞாயிற்றுக்கிழமை இரவு) நடைபெற்ற 92-வது ஆஸ்கார் விருதளிப்பு விழாவை கண்டு களித்தவர்கள் 23.6 மில்லியன் அமெரிக்க மக்கள்தான் பார்த்தார்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டை விட இது 20 விழுக்காடு குறைவாகும். கடந்த ஆண்டில் 29.6 மில்லியன் தொலைக்காட்சி இரசிகர்கள் ஆஸ்கார் விருதளிப்பு விழாவைப் பார்த்து இரசித்தார்கள்.

2018-ஆம் ஆண்டிலோ26.5 மில்லியன் இரசிகர்கள் ஆஸ்கார் விருதளிப்பு விழாவைப் பார்த்து இரசித்தார்கள்.

மலேசியாவில் கூட ஆண்டுதோறும் நேரலையாக ஆஸ்ட்ரோ ஒளிபரப்பும் ஆஸ்கார் விருதுகள் கடந்தாண்டு ஒளிபரப்பாகவில்லை. ஆனால், நேற்று திங்கட்கிழமை காலை “ஹலோ” அலைவரிசையின் வழி இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதளிப்பு விழாவை ஆஸ்ட்ரோ நேரலையாக ஒளிபரப்பியது.

சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக இதே ஆஸ்கார் விருதுகள் விழா 40 மில்லியன் தொலைக்காட்சி இரசிகர்களை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட நேரம் – அதாவது 3 மணி நேரத்திற்கும் மேலாக நீளும் ஒளிபரப்பு என்பது ஆஸ்கார் விருதுகளை மக்கள் தவிர்ப்பதற்கான காரணங்களுள் ஒன்று என ஆய்வுகள் காட்டுகின்றன.

ஒரு காலத்தில் ஒரு பிரமுகரை மைய அறிவிப்பாளராகக் கொண்டு நடத்தப்பட்ட ஆஸ்கார் விருதுகள் தற்போது அத்தகைய ஒருவர் இல்லாமலேயே நடத்தப்படுகின்றன. தேவையில்லாதவற்றையும் அதிகமாகவும் பேசுகிறார், சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுகிறார், நேர இழுத்தடிப்பு என்பது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து மைய அறிவிப்பாளரைக் கொண்டு ஆஸ்கார் விருதுகளை நடத்துவதை ஏற்பாட்டாளர்கள் இவ்வாண்டும் தவிர்த்தனர்.

எனினும், தீவிர சினிமா இரசிகர்களிடையே ஆஸ்கார் விருதுகள் இன்னும் கொண்டாடப்படும் திருவிழாவாகவேத் திகழ்கிறது.

அதிலும் இவ்வாண்டுக்கான ஆஸ்கார் விருதளிப்பு புதிய வரலாற்றைத் தோற்றுவித்திருக்கிறது.

முழுக்க, முழுக்க கொரிய மொழியிலேயே எடுக்கப்பட்ட ‘பாராசைட்’ என்ற கொரியப் படம் சிறந்த அனைத்துலகப் படமாகவும், சிறந்த திரைப்படமாகவும் விருதுகளைப் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

சிறந்த திரைப்பட விருதைப் பெறும் முதல் வெளிநாட்டுப் படம், முதல் கொரியப் படம் என்ற பெருமையையும் “பாராசைட்” திரைப்படம் பெற்றுள்ளது.

மேற்கண்ட விருதுகள் உட்பட மொத்தம் ஆறு ஆஸ்கார் விருதுகளை வென்று சாதனை படைத்திருக்கிறது பாராசைட்.