ரோம் – இத்தாலி நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிறுவனமான ஏர் இத்தாலி (Air Italy) நஷ்டத்தின் காரணமாக தனது சேவைகளை எதிர்வரும் பிப்ரவரி 25-ஆம் தேதியோடு நிறுத்திக் கொண்டு நிறுவனத்தை மூடவிருப்பதாக அறிவித்திருக்கிறது.
இதன் காரணமாக ஏர் இத்தாலி விமான சேவைகளுக்காக பிப்ரவரி 25-க்குப் பிறகு பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்தவர்களின் நிலைமை திண்டாட்டமாகியிருக்கிறது.
இத்தாலியின் மிகப் பெரிய விமான நிறுவனமாக அலிடாலியா (Alitalia) திகழ்கிறது. இதற்கு அடுத்த நிலையில் இருக்கும் ஏர் இத்தாலி நிறுவனத்தில், அலிசர்டா என்ற நிறுவனத்தின் மூலம் அகா கான் என்ற வணிகர் 51 விழுக்காடு பங்குகளையும் எஞ்சிய 49 விழுக்காடு பங்குகளை கத்தார் ஏர்வேஸ் நிறுவனமும் கொண்டிருக்கின்றனர்.
ஏர் இத்தாலி மூடப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக கத்தார் ஏர்வேஸ் அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்திருக்கிறது.
சிறுபான்மை பங்குதாரராக இருந்தாலும், ஏர் இத்தாலி நிறுவனத்தில் தொடர்ந்து தங்களின் கடப்பாட்டை நிலை நிறுத்தும் வண்ணம் முதலீடு செய்வோம் என கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் மேலும் தெரிவித்திருக்கிறது.
பிப்ரவரி 25 வரையிலான – ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களின் பயணங்கள் மற்ற விமான நிறுவனங்களின் சேவைக்கு மாற்றித் தரப்படும் என்றும், பிப்ரவரி 25-க்குப் பிறகு இருக்கைகளை முன்பதிவு செய்தவர்களுக்கான கட்டணங்கள் திருப்பித் தரப்படும் என்றும் ஏர் இத்தாலி அறிவித்திருக்கிறது.