கோலாலம்பூர்: சரவாக் ரிப்போர்ட் குறிப்பிட்டது போல, பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் இந்த ஒரு தவணை முடியும் வரையில் பிரதமராக இருப்பதை ஆதரிக்கும் சத்தியப் பிரமாணம் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து தமக்குத் தெரியாது என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
அவரைப் பொறுத்தவரை, 15- வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அவர் பிரதமராக வருவதைத் தடுக்க விரும்பும் குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை குறித்து அவருக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
“இது குறித்து எனக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை” என்று அவர் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
பிரதமரின் அதிகார மாற்றத்தை அடுத்த தேர்தல் வரைக்கும் நிறுத்துவதற்கு ஆதரவாக சட்டரீதியான அறிவிப்பில் கையெழுத்திட அம்னோ ,பாஸ், பெர்சாத்து மற்றும் பிகேஆர் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி ஆகியோர் கோலாலம்பூருக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக சரவாக் ரிப்போர்ட் கூறியுள்ளது.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அன்வார், நம்பிக்கைக் கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சியினரின் முயற்சிகள் இருந்தபோதிலும் நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களின் ஒற்றுமை மறுக்க முடியாதது என்று குறிப்பிட்டார்.
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்தி மலேசிய பொருளாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியமே தனது முக்கிய கவனம் என்று அவர் கூறினார்.
“ஒரு நல்ல வாழ்க்கைக்காக மக்கள் சிக்கலில் உள்ளனர். இது தற்போதைய ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் முக்கிய மையமாக இருக்க வேண்டும்.”
“நான் தனிப்பட்ட முறையில் பிரதமருக்கு தகவல் கொடுத்தேன் (பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவது மற்றும் மக்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்துதல்).”
“இது அரசாங்கத்தின் மையமாக இருக்க வேண்டும் என்ற எனது கருத்தை ஏற்றுக்கொண்டதை நான் பாராட்டுகிறேன்,” என்று அவர் கூறினார்.