Home One Line P1 138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவாக கையொப்பம், அன்வாரின் நிலை என்ன?

138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவாக கையொப்பம், அன்வாரின் நிலை என்ன?

2249
0
SHARE
Ad

கோலாலம்பூர்: துன் டாக்டர் மகாதீர் முகமட் இந்த தவணைக் காலம் முடியும் வரையிலும் பிரதமராக இருக்க வேண்டும் என்று சத்தியப் பிரமாண ஆவணங்கள் இருப்பதாக சில நம்பிக்கைக் கூட்டணி அமைச்சர்கள் இன்னும் மறுத்துவரும் நிலையில், 138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத்தகைய ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது 112 தேவைப்படும் எளிய பெரும்பான்மையை விட அதிகமாக இருக்கிறது. ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியைச் சேர்ந்தவர்கள் இதில் கையெழுத்திட்டுள்ளதாக அவ்வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.

“இப்போதைக்கு, டாக்டர் மகாதீர் 138 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் (சத்தியப் பிரமாண ஆவணம்) பெற்றுள்ளார்.”

#TamilSchoolmychoice

“மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற அவருக்கு இன்னும் 10 பேர் மட்டுமே தேவைப்படும்” என்றுஅந்த வட்டாரம் கூறியுள்ளது.

டாக்டர் மகாதீர் இந்த தவணைக் காலம் முடியும் வரையிலும் பிரதமராக இருக்கட்டும் என்று இந்த சத்தியப் பிரமாணம் குறிப்பிடுகின்றது.

அவ்வாறு நடந்தால், 2018 -ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற 14-வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நம்பிக்கைக் கூட்டணி ஒப்பந்தத்திற்கு முரணாக இது கருதப்படும்.

மகாதீர் இடைக்கால பிரதமராக மட்டுமே இருப்பார் மற்றும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமிற்கு அதிகாரத்தை ஒப்படைப்பார் என்று கூறியதெல்லாம் பொய்யாகிவிடும்.

அத்தகைய சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்திட்டவர்களில் 18 பேர் பாஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், 26 பேர் அன்வாரின் சொந்தக் கட்சியான பிகேஆரைச் சேர்ந்தவர்கள், 39 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கையெழுத்திட்டுள்ளனர். 13 பேர் டாக்டர் மகாதீரின் சொந்த கட்சியான பெர்சாத்துவிலிருந்து கையெழுத்திட்டுள்ளனர்.

“டாக்டர் மகாதீருடன் இருக்கும் சில நபர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை அணுகினர் – இருப்பினும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திடுவதில் பிரதமர் ஈடுபடவில்லை” என்று மற்றொரு ஆதாரம் கூறியது.

“டாக்டர் மகாதீரின் கீழ் உள்ள அரசாங்கம் வீழ்ச்சியடையப் போகிறது என்ற நம்பிக்கையை நிறுத்த வேண்டும். ”

“இத்தகைய வதந்திகள் பங்குச் சந்தையையும் நாட்டின் பெயரையும் பாதிக்கின்றன.”

“மேலும், அன்வாரிடம் பதவியை ஒப்படைப்பது தொடர்பான பிரச்சனை தொடர்கிறது, ஆனால் டாக்டர் மகாதீருக்கு தேசத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற முழு கால அவகாசம் தேவை.”

“நம் பொருளாதாரம் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று தெரியாமல், கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் மாற்றத்திற்கு நாம் ஒப்புக்கொண்டோம்.”

“நாங்கள் பொறுப்பேற்றதை அடுத்து 1 டிரில்லியன் கடனை நாடு கொண்டிருந்தது, இது எங்கள் தேர்தல் அறிக்கையில் பட்டியலிடப்பட்ட பல நடவடிக்கைகளுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது”

“இப்போது மாற்றம் ஏற்பட்டால் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக விஷயங்களை மேலும் மோசமாக்கும்” என்று அவர் கூறினார்.