கோலாலம்பூர், ஏப்ரல் 9 – எதிர்வரும் 13 ஆவது பொதுத் தேர்தலில், ஹிண்ட்ராப் இயக்கம் எந்த கட்சிக்கு ஆதரவு தரப்போகிறது என்பதை, அதன் தலைவர் வேதமூர்த்தி அடுத்த 48 மணி நேரத்திற்குள் முடிவு செய்ய வேண்டுமென்று, ஹிண்ட்ராப் இயக்கத்தின் முன்னாள் தகவல் தொடர்பு தலைவரான எஸ்.ஜெயதாஸ் (படம்) மற்றும் அவ்வியக்கத்தின் முன்னாள் ஆதரவாளர்கள் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது குறித்து ஜெயதாஸ் கூறுகையில், “ஹிண்ட்ராப் இயக்கத்தின் ஐந்தாண்டு திட்ட வரைவினை தேசிய முன்னணி ஆதரிக்கும் பட்சத்தில், இந்திய மக்கள் அனைவரும் பொதுத்தேர்தலில், தேசிய முன்னணிக்கு ஆதரவு தரும்படி வேதமூர்த்தி கேட்டுக்கொள்வது மிகவும் வருத்தமளிக்கிறது.
இந்திய மக்களை கடந்த 56 ஆண்டுகளாக புறக்கணித்து வரும் தேசிய முன்னணிக்கு ஆதரவு தர ஹிண்ட்ராப் முன் வந்துள்ளது மேலும் அதிர்ச்சியைத் தருகிறது.
அதே நேரத்தில், ஒருவேளை ஹிண்ராப்பின் ஐந்தாண்டு திட்ட வரைவினை தேசிய முன்னணியோ அல்லது பக்காத்தானோ ஆதரிக்காத பட்சத்தில், இந்திய மக்களை ஓட்டுப் போடவேண்டாம் என்று வேதமூர்த்தி கூறிவருவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
காரணம் இந்திய மக்கள் ஓட்டுப் போடவில்லை என்றால் அது தேசிய முன்னணிக்கு சாதகமாக அமைந்துவிடும்.
இதே போல் தான் இலங்கையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மக்களை ஓட்டுப்போட வேண்டாம் என்று சொன்னார். கடைசியில் அதுவே அவர்களுக்குப் பாதகமாக அமைந்துவிட்டது.
எனவே இதற்கு மேலும் வேதமூர்த்தி இந்திய மக்களை குழப்பி, அவர்களை பகடைக் காயாக ஆக்க வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த மார்ச் 25 ஆம் தேதி, ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்திக்கும், பிரதமர் நஜிப்புக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பு குறித்து தனது வருத்தத்தையும் ஜெயதாஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு, ஹிண்ட்ராப் இயக்கம் தனது ஐந்தாண்டு திட்ட வரைவினை ஆதரிக்கும் படி எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.