Home One Line P2 ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதிஜா – எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் சமய சர்ச்சை மோதல்

ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதிஜா – எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் சமய சர்ச்சை மோதல்

868
0
SHARE
Ad
மகள் கதிஜாவுடன் ஏ.ஆர்.ரஹ்மான்

சென்னை – பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் எந்தவித சர்ச்சையிலும் சிக்காதவர். அவரது மகன் அமீன் இசைத் துறையில் ஈடுபட்டு சில படங்களில் பாடியும் இருக்கிறார்.

ஆனால், ரஹ்மானின் மகள் கதிஜா குறித்து பொது வெளிகளில் அவ்வளவாக செய்திகள் வெளிவந்ததில்லை. இந்நிலையில் இஸ்லாமிய மதம் குறித்து சர்ச்சைக்குரிய பல முற்போக்குக் கருத்துகளைக் கூறி அடிக்கடி பிரச்சனைகளில் சிக்கும் வங்காள தேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், கதிஜாவின் படத்தை வெளியிட்டு அண்மையில் கூறியிருக்கும் கருத்து சமூக ஊடகங்களில் சர்ச்சையாகியிருக்கிறது.

தஸ்லிமா நஸ்ரின் தற்போது இந்தியாவில் அரசியல் அடைக்கலம் தரப்பட்டு வசித்து வருகிறார்.

#TamilSchoolmychoice

கதிஜா இஸ்லாமிய முறைப்படி பர்கா அணிந்திருக்கும் புகைப்படத்தை தனது வலைத் தளத்தில் வெளியிட்டிருக்கும் தஸ்லீமா நஸ்ரின், அந்தப் பதிவில் “நான் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையை முழுமையாகக் காதலிப்பவள். ஆனால் அவரது அருமை மகளை எப்போது பார்த்தாலும், எனக்கு மூச்சை அடைப்பதுபோல் இருக்கிறது. ஒரு நல்ல கலாச்சாரக் குடும்பத்தில் பிறந்த, நன்கு படித்த பெண்கூட இவ்வாறு மூளைச் சலவை செய்யப்பட முடியும் என்பது எனக்கு மனவருத்தத்தைத் தருகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வங்காளதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்

அதைத் தொடர்ந்து, கதிஜாவும் நஸ்ரினுக்குப் பதிலடி கொடுத்திருக்கிறார்.

“ஒருவருடத்திற்கு முன்னால் இதே பிரச்சனை சர்ச்சையாக்கப்பட்டது. இப்போது மீண்டும் இந்தப் பிரச்சனை கிளப்பி விடப்பட்டிருக்கிறது. நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் எல்லோரும் ஒரு பெண்மணி அணியும் ஆடை பற்றி அக்கறை செலுத்துகின்றனர். நான் இதைப் பார்த்து ஆச்சரியமடைந்திருக்கிறேன். இந்தப் பிரச்சனை பற்றி கேள்வி எழுப்பப்படும் போதெல்லாம் எனக்குள் நெருப்பு பற்றி எரிகிறது. எவ்வளவோ சொல்ல நினைக்கிறேன். கடந்த ஓராண்டில் நான் என்னைப் பற்றிய இன்னொரு புதிய வடிவத்தைக் கண்டிருக்கிறேன். நான் பலவீனமானவளாக இருக்க மாட்டேன். நான் என் வாழ்க்கையில் எடுத்த முடிவுகள் குறித்தும் வருத்தப்பட மாட்டேன். நான் என்ன செய்கிறேன் என்பது குறித்து நான் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடவுள் விருப்பத்தால் எனது பணிகள் என்னைப் பற்றி எடுத்துக் கூறும். இதைவிட நான் கூடுதலாக எதையும் கூற விரும்பவில்லை. நான் ஏன் இந்த விவகாரத்தை வெளியே கொண்டு வந்து என்னைப் பற்றி விளக்கம் கூறுகிறேன் என்று கூட சிலர் நினைக்கலாம். ஆனால் கவலைக்குரியது என்னவென்றால், இதுபோன்று நடக்கிறபோது, ஒருவர் அவரைப் பற்றிக் கூறத்தான் வேண்டும். அதனால்தான் நானும் அதனைச் செய்கிறேன்” என்று கதிஜா தனது சமூக ஊடகத்தின் மூலம் நஸ்ரினுக்குப் பதிலளித்திருக்கிறார்.