தோக்கியோ – உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் கொவிட் 19 நச்சுயிரி (வைரஸ்) விவகாரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பது “டைமண்ட் பிரின்சன்ஸ்” என்ற ஜப்பானிய சொகுசுக் கப்பலில் சிக்கியிருக்கும் பயணிகளில் பலர் கொவிட் 19 நச்சுயிரியால் பாதிக்கப்பட்டு வெளியே வர முடியாமல் தவிப்பதுதான்.
ஜப்பானின் யோக்கோஹாமா துறைமுகத்தில் டைமண்ட் பிரின்சன்ஸ் தற்போது நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்தக் கப்பலில் கொவிட் 19 நச்சுயிரியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 356 ஆக உயர்ந்திருக்கிறது.
இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் அந்தக் கப்பலில் சிக்கியுள்ள அமெரிக்கர்களை வெளியேற்ற முன்வந்துள்ள அமெரிக்கா அதற்காக ஏற்பாடு செய்திருக்கும் சிறப்பு பயண விமானங்கள் தோக்கியோ வந்தடைந்திருக்கின்றன.
இதற்கிடையில், உலகம் முழுவதும் கொவிட் 19 நச்சுயிரியால் பாதிக்கப்பட்டிருக்கும் எண்ணிக்கை 69 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது.
மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,669 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் நால்வர் சீனாவுக்கு வெளியே மரணமடைந்திருக்கின்றனர். பிரான்சில் சீனாவைச் சேர்ந்த ஒரு சுற்றுப் பயணி கொவிட் 19 பாதிப்பால் உயிரிழந்திருப்பது நேற்று சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.