கோலாலம்பூர் – திங்கட்கிழமை (மார்ச் 2) நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் பெர்சாத்து கட்சியின் பிரதமர் வேட்பாளராக டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நிறுத்தப்படலாம் என துன் மகாதீர் கோடி காட்டினார்.
“ஒட்டுமொத்த அம்னோ கட்சியினருடனும் இணைந்து பணியாற்ற நான் தயாராக இல்லை. ஆனால் மொகிதின் யாசின் வேறு நிலைப்பாடு கொண்டிருக்கிறார். அம்னோவுடன் இணைந்து பணியாற்ற அவர் தயாராக இருக்கிறார்” என்று மகாதீர் கூறியிருக்கிறார்.
இதனால், அம்னோவும் பாஸ் கட்சியும் இணைந்து தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு மொகிதின் யாசினுக்கு தங்களின் ஆதரவை வழங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே, இந்த இரு கட்சிகளும் மகாதீருக்கான தங்களின் ஆதரவை மீட்டுக் கொண்டுள்ளன.
எனினும், அரசியல் களத்தில் இன்னும் பிரதமராகத் தொடர மகாதீர் ஆர்வம் கொண்டிருக்கிறார் என்றும் அடுத்த இரண்டு நாட்களுக்குள் மீண்டும் பிரதமர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தக் கூடும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
அப்படி மகாதீருக்கு ஆர்வம் இல்லை என்றாலும் ஏன் மீண்டும் பெர்சாத்து கட்சியின் தலைமைப் பொறுப்புக்குத் திரும்புகிறார் என்ற கேள்வியும் எழுகிறது.
இதற்கிடையில் இன்று மாலையில் மொகிதின் யாசின் இல்லத்தில் பெர்சாத்து தலைவர்களும், அஸ்மின் அலி தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் திரண்டனர். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய பெர்சாத்து உச்சமன்ற உறுப்பினர் ரிட்சுவான் யூசோப் நூற்றுக்கு நூறு விழுக்காடு தங்களின் கட்சி மொகிதின் யாசினை பிரதமர் பதவிக்கு ஆதரிக்கும் என்று கூறினார்.