Home One Line P1 “நாட்டின் வரலாற்றில் மிக மோசமான சுயநலவாதி மகாதீர்” – சைட் இப்ராகிம் சாடல்

“நாட்டின் வரலாற்றில் மிக மோசமான சுயநலவாதி மகாதீர்” – சைட் இப்ராகிம் சாடல்

992
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அம்னோவின் முன்னாள் சட்டத் துறை அமைச்சரும் பின்னர் அந்தக் கட்சியிலிருந்து விலகி, பிகேஆர் கட்சியில் இணைந்து, பின்னர் அதிலிருந்தும் வெளியேறி தற்போது ஜசெகவின் கிளந்தான் மாநிலத் தலைவராக இருப்பவர் வழக்கறிஞர் டத்தோ சைட் இப்ராகிம்.

பகிரங்கமாக அவர் சமூக ஊடகத்தில் வெளியிட்டிருக்கும் கடிதம் ஒன்றில் மகாதீரை மிக மோசமான சுயநலவாதி என அவர் வர்ணித்திருக்கிறார். இத்தனைக்கும் மகாதீர் பெர்சாத்து கட்சியைத் தொடக்குவதற்கு முன்னரே அவருடன் நெருக்கமாக இருந்த சைட் இப்ராகிம், பல போராட்டங்களிலும் மகாதீரோடு இணைந்து கலந்து கொண்டவராவார்.

சைட் இப்ராகிம் தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருக்கும் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • ஒருவரின் சொந்த சுயநலன்களையும், சுயவிருப்பங்களையும், தேசிய நலன்களைப் போல தோற்றமளிக்குமாறு செய்வதுதான் அரசியல் என அறிஞர்கள் கூறுவார்கள். அந்த வகையில் பார்த்தால், துன் மகாதீர் இதுவரை நமது நாட்டில் காணாத அளவுக்கான சுயநலமிக்க மனிதர் எனலாம்.
  • அவர் பிரதமராக இருக்க விருப்பமில்லாமல் பதவி விலகவில்லை. மாறாக ஒரே முடிவில் அத்தனை அமைச்சர்களையும் நீக்குவதுதான் அவரது நோக்கம். காரணம், ஒரு பிரதமர் பதவி விலகும்போது, அவரது ஒட்டுமொத்த அமைச்சரவையும் பதவி விலகுகிறது. இதுதான் அவரது சுயநலம். அரசாங்கப் பதவியை வைத்துக் கொண்டு இதுபோன்ற விளையாட்டுகள் விளையாடக் கூடாது.
ஒருகாலத்தில் மகாதீருடன் நெருக்கமாக இருந்த சைட் இப்ராகிம்
  • இடைக்காலப் பிரதமராக மகாதீர் பொறுப்பேற்றிருக்கக் கூடாது. இடைக்காலப் பிரதமராக இருப்பவர் அடுத்த பிரதமருக்கு வழிவிட்டு ஒதுங்கும் வகையில் காபந்து அரசாங்கத்தின் பிரதமராக இருக்க வேண்டும். மாறாக, தானே பிரதமராக முயற்சி செய்யக் கூடாது. அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்க நியமிக்கப்படும் உண்மையான இடைக்காலப் பிரதமர் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்க முயற்சிகளில் ஈடுபட வேண்டுமே தவிர, தானே பிரதமராக முயற்சி செய்யக் கூடாது. அப்படி அவருக்கே பிரதமராக ஆசை இருந்தால், இடைக்காலப் பிரதமர் பொறுப்பை ஏற்றிருக்கக் கூடாது.
  • இதன் மூலம் நவீன ஜனநாயக அமைப்பு நாடுகளில் இல்லாத அளவுக்கு தானே அதிகாரத்தைக் கைப்பற்றும் திட்டத்தை மகாதீர் தீட்டியிருக்கிறார். ஒருவர் இதைவிடக் கூடுதலாக சுயநலவாதியாக இருக்க முடியாது.
  • பக்காத்தான் கூட்டணியிலிருந்து பெர்சாத்து வெளியேறும் என முடிவெடுக்கப்பட்ட பெர்சாத்து உச்சமன்றக் கூட்டத்திற்குத் தலைமையேற்றதே மகாதீர்தான். இதன் மூலம் பக்காத்தான் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு எண்ணிக்கை பாதிக்கப்படும் எனத் தெரிந்தே அவர் இந்த முடிவை எடுத்தார். அன்வாரைப் பிரதமராகத் தடுப்பதற்காகவே அவர் இதனைச் செய்தார்.
  • தன்னைப் பிரதமராக்கி, கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது புகழ்பாடி வந்த – தன்னை ஆதரித்த – கூட்டணித் தலைவர்களுக்கு அவர் துரோகம் செய்தார். இதுவும் அவரது இன்னொரு சுயநலத் தன்மையாகும்.
  • இந்த சுயநலமிக்க மனிதனை இடைக்காலப் பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்கு மலாய் ஆட்சியாளர்கள் மாமன்னருக்கு ஆதரவு தர வேண்டும் என நான் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
#TamilSchoolmychoice

மேற்கண்டவாறு சைட் இப்ராகிம் தனது கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.

-தொகுப்பு : இரா.முத்தரசன்