
கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை இரவு தலைநகரில் யாயாசான் அல்புக்காரியில் அன்வார் இப்ராகிம் உள்ளிட்ட தேசிய முன்னணி தலைவர்களுடன் சந்திப்புக் கூட்டம் நடத்திய துன் மகாதீர் தனக்கு ஆதரவாக இருக்கும் 114 மக்களவை உறுப்பினர்களின் பட்டியலை பகிரங்கமாக வெளியிட்டார்.
எனினும் அவர் அந்தப் பட்டியலை வெளியிட்ட சிறிது நேரத்தில் சரவாக் ஸ்ரீ அமான் நாடாளுமன்ற உறுப்பினர் மாசிர் குஜாட் தான் மகாதீரை ஆதரிக்கவில்லை என்றும் மொகிதின் யாசினையே பிரதமராக ஆதரிப்பதாகவும் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து மகாதீரின் ஆதரவு எண்ணிக்கை 113 ஆகக் குறைந்தது.

இதற்கிடையில், நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவான பிகேஆர் கட்சியின் உலு சிலாங்கூர் மக்களவை உறுப்பினர் ஜூன் லியோவ் பட்டியலில் இருந்து தவறுதலாக விடுபட்டு விட்டார் என அறிவிக்கப்பட்டு, அவரது பெயரும் சேர்த்துக் கொள்ளப்பட பட்டியல் மீண்டும் 114 ஆக உயர்ந்தது.
இதற்கிடையில் பேராக் புக்கிட் கந்தாங் மக்களவை உறுப்பினர் சைட் அபு ஹூசின் ஹாபிஸ் சைட் அப்துல் பாசால், தான் மகாதீரை ஆதரிக்கவில்லை என்றும் மொகிதின் யாசினையே ஆதரிப்பதாகவும் நேற்றிரவு அறிவித்தார். அம்னோ சார்பில் புக்கிட் கந்தாங் தொகுதியில் வென்ற இவர் பின்னர் அம்னோவிலிருந்து விலகி சுயேச்சை உறுப்பினராக பெர்சாத்து கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தார்.
புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் பட்டியலிலிருந்து விடுபட்டதைத் தொடர்ந்து தற்போது மகாதீரின் ஆதரவு மக்களவை உறுப்பினர்கள் 113 ஆக இருந்து வருகிறது.
தனது பட்டியலை மாமன்னர் ஏற்றுக் கொள்வார் என நம்புவதாகவும் மகாதீர் தெரிவித்தார்.