ஈப்போ – 2018 மே மாதம் முதல் பேராக்கில் ஆட்சி அமைத்து செயல்பட்டு வரும் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் இனியும் தொடர்வதற்கான வாய்ப்புகள் இல்லை என நடப்பு பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறியிருப்பதாக ஸ்டார் ஊடகத்தின் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
என்ன நடக்கிறது என்பதை அறிய மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமட் பைசால் அசுமுவைத் தொடர்பு கொள்ளத் தான் முயற்சி செய்ததாகவும் ஆனால் அவர் தனது செல்பேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும் அவரைச் சந்திக்கவும் முடியவில்லை என்றும் சிவநேசன் கூறியிருக்கிறார்.
அகமட் பைசால் அசுமு பேராக் மாநிலத்தின் பெர்சாத்து கட்சி தலைவருமாவார்.
எங்களால் பேராக் மாநிலத்தை தொடர்ந்து ஆட்சி செய்ய முடியுமா என்பது பைசால் முடிவைப் பொறுத்தே இருக்கிறது என்றும் சிவநேசன் கூறியிருக்கிறார்.
“ஏற்கனவே 2009 பேராக் மாநில ஆட்சிக் கவிழ்ப்பு, அரசியலமைப்பு சட்ட நெருக்கடி போன்ற சம்பவங்களைக் கடந்து வந்திருப்பதால், இப்போது நடந்து கொண்டிருப்பது எனக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை. இது எனது இரண்டாவது அனுபவமாகும். 2009 சம்பவங்களைத் தொடர்ந்து அரசியலில் இன்னும் நீடித்துக் கொண்டிருப்பவர்கள் நானும் அப்போதைய மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் நிசாரும்தான். இப்போது நடப்பதை நாங்கள் எதிர்பார்த்தோம். நாங்கள் 20 மாதங்கள் ஆட்சியில் நீடித்திருந்தது அழகான, அனுபவமாகும். கடந்த முறை 10 மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தோம். அதைவிடக் கூடுதலாக இப்போது நீடித்திருக்கிறோம்” என்றும் சிவநேசன் கூறியிருக்கிறார்.
நம்பிக்கைக் கூட்டணி பேராக் மாநிலத்தில் ஆட்சியை இழப்பது உறுதிப்படுத்தப்பட்டால் மீண்டும் தான் தனது வழக்கறிஞர் தொழிலுக்குத் திரும்ப உத்தேசித்திருப்பதாகவும், சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான சிவநேசன் மேலும் தெரிவித்தார்.
தனது அலுவலகத்தைக் காலி செய்யும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் சிவநேசன், இன்று திங்கட்கிழமையுடன் தனது அரசாங்கக் காரை ஒப்படைக்கவிருப்பதாகவும், பைசால் அசுமுவின் பதிலுக்குக் காத்திருக்கப் போவதாகவும் கூறினார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மொகிதின் யாசினின் பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் பைசால் அசுமு மொகிதின் இல்லத்தில் இருக்கும் புகைப்படங்களும், காணொளிகளும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன.
மொகிதின் இல்லத்திலிருந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய பைசால் அசுமு பேராக் மாநில சுல்தானைத் தான் சந்திக்கப் போவதாகவும் தெரிவித்தார்.