Home One Line P1 “நானா இல்லை நீயா?” – ஆட்சி மாற்றத்திற்கு யார் காரணம்? மொகிதினைக் குற்றம் சாட்டுகிறார் மகாதீர்

“நானா இல்லை நீயா?” – ஆட்சி மாற்றத்திற்கு யார் காரணம்? மொகிதினைக் குற்றம் சாட்டுகிறார் மகாதீர்

746
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதற்கும், அதைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கும் காரணம் யார் என விரல் நீட்டிக் குற்றம் சாட்டும் படலம் துன் மகாதீர், மொகிதின் யாசின் இடையில் தொடங்கியிருக்கிறது.

தனது பதவி விலகல் குறித்து பத்திரிகையாளர்களிடம் சில நாட்களுக்கு முன்பு விவரித்தபோது, மொகிதின் அம்னோவை அப்படியே ஒட்டு மொத்தமாக சேர்த்துக் கொண்டு புதிய ஆட்சி அமைக்க விரும்பியதாகவும், தானோ, அம்னோவிலிருந்து விலகும் ஊழல் பின்னணி அற்ற தனி நபர்களை மட்டும் இணைத்துக் கொள்வோம், ஒட்டு மொத்த அம்னோ கட்சியோடு கூட்டணி வைக்க முடியாது என்று உறுதியோடு கூறிவிட்டதாகவும் மகாதீர் தெரிவித்திருந்தார்.

அதன் காரணமாகவே, தான் பதவியிலிருந்து விலகியதாகவும், ஒற்றுமைக் கூட்டணி அரசாங்கம் அமைக்க முற்பட்டதாகும் மகாதீர் மேலும் தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

தான் பதவியேற்ற பின்னர் திங்கட்கிழமை (2 மார்ச்) இரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதல் தொலைக்காட்சி உரையில் மொகிதின் இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மொகிதின் பேசியிருந்தார்.

“நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கும் மகாதீரின் பதவி விலகல்தான் காரணம். எனக்கு பிரதமராக உண்மையிலேயே விருப்பம் இல்லை. நாட்டின் நிலைமையைக் காப்பாற்றவே நான் பிரதமர் பதவியேற்க முன்வந்தேன்” எனக் கூறியிருந்தார் மொகிதின்.

பதவி துறந்தாலும், தனது 94 வயதிலும் சுறுசுறுப்புக்குப் பெயர்போன, துன் மகாதீர், நேற்றுக் காலை 9.30 மணிக்கே தான் தலைமை வகிக்கும் பெர்டானா அறவாரியக் கட்டடத்திற்கு வந்து தனது அரசியல் பணிகளைத் தொடங்கி விட்டார். அதே வேளையில் நேற்று (மார்ச் 3) தனது வலைத்தளமான  “செ டெட்” இணையப் பக்கத்தில் மொகிதினின் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்து, மொகிதின்தான் அரசியல் நெருக்கடியைத் திட்டமிட்டு உருவாக்கினார் எனக் குற்றம் சாட்டியிருக்கிறார்.

“எந்தக் காரணமும் இல்லாமலா நான் திடீரென பதவி விலகினேன்? அரசாங்கத்தின் முழு ஆதரவைப் பெற்றிருந்த நான், எதிர்க்கட்சிகளின் ஆதரவையும், ஊழல் குற்றம் சாட்டப்பட்ட நஜிப் துன் ரசாக் மற்றும் அவர் போன்றவர்களின் தரப்பினரின் ஆதரவையும் பெற்றிருந்தேன். பின் ஏன் எந்தக் காரணமும் இல்லாமல் நான் பதவி விலகினேன்?” என மகாதீர் தனது பதிவில் கேள்வி எழுப்பியிருந்தார்.

“நீங்கள் சொல்வது அறிவுபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படும்படி இல்லை” என்றும் மகாதீர் தனது வலைப்பதிவில் சாடியிருக்கிறார்.

தொடர்ந்து அவர் தனது பதிவில் தெரிவித்திருக்கும் முக்கியம் அம்சங்கள் பின்வருமாறு:

  • கடந்த வார அரசியல் நெருக்கடியின்போது கட்சி-சார்பற்ற ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க முயற்சி செய்தேன். காரணம், அரசு நிர்வாகத்தை விட தங்களின் அரசியல் நலன்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் அரசியல்வாதிகளைப் பார்த்து மக்கள் களைப்படைந்து விட்டார்கள்.
  • எனது (ஒற்றுமை அரசாங்க) பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படாததால்தான் நான் பதவி விலகினேன்.
  • கொண்ட கொள்கையை விட அரசியல் நலன்களுக்கு மொகிதின் முக்கியத்துவம் கொடுத்தார். அதனால்தான் அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டன. இவை எப்போது முடிவுக்கு வரும் என்பதும் தெரியவில்லை.

மேற்கண்டவாறு மகாதீர் தனது வலைப்பதிவில் கூறியிருப்பதைத் தொடர்ந்து, அரசியல் காய் நகர்த்தல்களை ஒருபுறம் நடத்திக் கொண்டு, இன்னொரு புறத்தில் மீண்டும் வலிமைமிக்க தனது பேனாவைக் கையிலெடுத்து, தனது வலைப்பதிவில் தனது கருத்துகளை எழுதிவரப் போகிறார் என்பதும் தெளிவாகியுள்ளது.