Home One Line P1 மக்களவை மே 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது – மொகிதினின் பலவீனத்தைக் காட்டுகிறது

மக்களவை மே 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது – மொகிதினின் பலவீனத்தைக் காட்டுகிறது

922
0
SHARE
Ad

கோலாலம்பூர் – (கூடுதல் தகவல்களுடன்) எதிர்வரும் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறவிருந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் எதிர்வரும் மே 18-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக மக்களவைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் அரிப் அறிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நாடாளுமன்றக் கூட்டத்தை ஒத்திவைக்கும் கடிதம் கிடைக்கப் பெற்றதாகவும், இந்த ஆண்டுக்கான நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் தொடக்க விழா மார்ச் 9-ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், அந்த நிகழ்ச்சி மே 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவும் முகமட் அரிப் மேலும் தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை இதன் தொடர்பிலான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறியதாக பெரித்தா ஹரியான் மலாய் நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அம்னோவின் அனுவார் மூசா நாடாளுமன்றம் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும் என அம்னோ சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகக் கூறியிருந்தார்.

மொகிதின் யாசினின் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஒத்திவைக்கும் முடிவு, நாடாளுமன்றத்தை எதிர்நோக்க அவர் தயங்குகிறார், அச்சம் கொண்டிருக்கிறார் என்பதையே காட்டுவதாகவும், இதன் மூலம் அவரது பலவீனம் வெளிப்பட்டிருப்பதாகவும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

மேலும் அம்னோவின் அனுவார் மூசாவின் அறிவிப்பைத் தொடர்ந்து அடுத்த நாளே நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஒத்தி வைக்கும் முடிவு எடுக்கப்படுவது, மொகிதின் யாசின் தலைமைத்துவம் அம்னோவின் கைப்பிடிக்குள் இருப்பதையே காட்டுகிறது என்பதையும் மறைமுகமாகத் தெரிவிக்கிறது.

இதற்கிடையில், மக்களவையின் அவசரக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுவதற்கான நடவடிக்கைகளை நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.