கோலாலம்பூர்: பெரிக்காத்தான் நேஷனல் அமைச்சரவையை உருவாக்கும் பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை சமர்ப்பிக்க நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளபோது, மார்ச் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவை அமர்வு ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று அம்னோ பொதுச்செயலாளர் அனுவார் மூசா விரும்புகிறார்.
“பழைய அரசாங்கத்தின் காலக்கெடுவை தொடர முடியாது என்று நான் கருதுகிறேன். பிரதமர் மக்களவைத் தலைவருக்கு புதிய அறிவிப்பு கொடுக்க வேண்டும்.”
“புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை கூட்டப்படுவதற்கு முன்பு குறைந்தது இரண்டு மாதங்கள் தேவைப்படுகிறது. நோன்பின் போது அல்லது நோன்பு பெருநாளுக்குப் பிறகு நாம் சந்திக்க முடியாது” என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கொவிட் -19 பாதிப்பைத் தொடர்ந்து நாடாளுமன்றம் அமர்வு தள்ளி வைக்கப்படாது என்று நேற்று சபாநாயகர் முகமட் அரிப் முகமட் யூசோப் அளித்த அறிக்கை குறித்து அனுவார் கருத்து தெரிவித்தார்.
“தாமதம் இருக்க வேண்டும், ஆனால் கொவிட் -19 காரணமாக அல்ல. நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தை அமைத்தபோது, நாடாளுமன்றம் இரண்டு மாதங்களுக்குப் பிறகு கூடியது.”
“பல விஷயங்களை அரசாங்கம் நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு முடிக்க வேண்டும். இது அமைச்சரவை உருவாக்கம், மக்களவைத் தலைவர் பரிந்துரைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகள் மற்றும் அரசாங்க பதில்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கியது, ”என்று அவர் கூறினார்.