கோலாலம்பூர்: புதிய பிரதமருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், அது மாமன்னருக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு ஒப்பானது என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்தார்.
“நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை விரும்புவோர் மாமன்னர் மீது நம்பிக்கை இல்லாதவர்கள். இதுபோன்ற நடத்தைகளை மதிப்பீடு செய்வது பொதுமக்களிடமே உள்ளது” என்று ஹாடி இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை, மொகிதின் யாசின் நாட்டின் எட்டாவது பிரதமராக பதவியேற்றார்.
எவ்வாறாயினும், மொகிதினை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உண்மையான எண்ணிக்கையை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. வருகிற மே மாதம் நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது மட்டுமே இது நிரூபிக்கப்படும்.
இதற்கிடையில், நம்பிக்கைக் கூட்டணியின் நல்ல கொள்கைகள் மொகிதினின் புதிய அரசாங்கத்தால் தொடரப்படும் என்று ஹாடி கூறினார்.
“எங்கள் வாக்குறுதிகள் உட்பட, சாத்தியமற்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது” என்று அவர் கூறினார்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, பொருளாதார பிரச்சனைகள், சமூகப் பிரச்சனைகள், ஒற்றுமை மற்றும் மனித மூலதனத்தின் வளர்ச்சியைக் கையாள்வதில் புதிய அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று ஹாடி கூறினார்.