கோலாலம்பூர்: புதிய பிரதமரை நியமிப்பதில் மாமன்னர் இனவெறியுடன் நடந்து கொண்டார் என்று குற்றம் சாட்டியதாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் காலிட் சமாட் மீது கேள்வி எழுப்பியுள்ளார்.
முகநூலின் மூலம், முன்னாள் அமைச்சர் ரெட்ஜுவான் யூசோப்பின் ஓர் அறிக்கையை நஜிப் பகிர்ந்து கொண்டார். மேலும், மாமன்னரிடன் காலிட் மன்னிப்பு கேட்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
“காலிட் சமாட் எப்படி மாமன்னரை இனவெறியாளர் என்று குற்றம் சாட்டினார்,” என்று நஜிப் கேள்வி எழுப்பினார்.
நம்பிக்கைக் கூட்டணி நிகழ்ச்சியில் அமானா தகவல் தொடர்பு இயக்குநரின் காணொளியையும் நஜிப் பகிர்ந்துள்ளார்.
மொகிதின் யாசினை பிரதமராக நியமிக்க மாமன்னர் எடுத்த முடிவைக் குறித்து பேசிய காலிட் இந்த முடிவு, நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் சரிவுக்கு வழிவகுத்தது என்று கூறினார்.
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் பதவி விலகியதைத் தொடர்ந்து, அரசாங்கத்தை அமைப்பதற்கு நம்பிக்கைக் கூட்டணிக்கு பெரும்பான்மை ஆதரவு இருந்ததாக காலிட் கூறினார். ஆனால், மாமன்னர் அதில் உறுதியாக இருக்கவில்லை.
“ஆனால் மாமன்னர் உறுதியாக இல்லை. எதனால்? 100 பேர்களில் 40 பேர் மட்டுமே மலாய்க்காரர்கள். 60 பேர் மலாய்க்காரர் அல்லாதவர்கள். “என்று அவர் ஓர் உரையில் கடந்த வியாழக்கிழமை கூறியுள்ளார்.