Home One Line P1 ஜோகூர் : 2 தவணைகள் தேசிய முன்னணி ஆட்சி இருந்தும் ஆட்சிக் குழுவில் மஇகா இடம்...

ஜோகூர் : 2 தவணைகள் தேசிய முன்னணி ஆட்சி இருந்தும் ஆட்சிக் குழுவில் மஇகா இடம் பெறவில்லை! ஏன் தெரியுமா?

651
0
SHARE
Ad
ஜோகூர் ஆட்சிக் குழு உறுப்பினராக கடந்த மார்ச் 6-ஆம் தேதி பதவியேற்ற கஹாங் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.வித்தியானந்தன்…

(கடந்த 2018 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி ஜோகூர் மாநிலத்தை முதன் முறையாக இழந்ததைத் தொடர்ந்து மஇகாவுக்கும் ஆட்சிக் குழுவில் இடம் பெறும் வாய்ப்பு பறிபோனது. எனினும் கடந்த வெள்ளிக்கிழமை மார்ச் 6-ஆம் தேதி மீண்டும் ஜோகூர் மாநிலத்தைக் கைப்பற்றியிருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் என்ற தேசியக் கூட்டணியின் புதிய மாநில ஆட்சிக் குழுவில் மீண்டும் மஇகா இடம் பெற்றிருக்கிறது. கஹாங் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.வித்தியானந்தன் மீண்டும் ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பதவியில் அமர்ந்திருக்கிறார். எனினும் கடந்த காலங்களில் இரண்டு தவணைகளில் ஜோகூர் மாநிலத்தை தேசிய முன்னணி ஆட்சி செய்தபோதும் – அந்த மாநில அரசாங்கத்தின் அங்கமாக மஇகா திகழ்ந்தபோதும் – ஆட்சிக் குழுவில் மட்டும் இடம் பெற முடியாமல் போனது ஏன் என்பதை வரலாற்று சம்பவங்களோடு விவரிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன். இந்தக் கட்டுரை மார்ச் 8, மார்ச் 9 தேதியிட்ட மக்கள் ஓசை நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது)

2018-ஆம் ஆண்டில், ஜோகூர் மாநில அரசாங்கத்தை மீண்டும் கைப்பற்றத் தவறியைதைத் தொடர்ந்து தேசிய முன்னணி அரசாங்கம் ஜோகூர் மாநில வரலாற்றில் முதன் முறையாக தனது ஆட்சியை இழந்தது.

ஆம்! அம்னோ பிறந்த மாநிலமான ஜோகூர் மாநிலத்தை எத்தகைய நெருக்கடியானப் பொதுத் தேர்தல்களிலும் அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி சுலபமாகக் கைப்பற்றியே வந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

2018-இல் முதன் முறையாக மாநிலத்தை இழந்த பின்னர் பக்காத்தான் ஹரப்பான் எனப்படும் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி மாநிலத்தில் அமைந்தது. அக்கூட்டணியின் சார்பில் இந்திய சமூகத்தைப் பிரதிநிதிக்கும் ஆட்சிக் குழு உறுப்பினராக ஜசெகவின் டாக்டர் எஸ்.இராமகிருஷ்ணன் (படம்) இடம் பெற்றார்.

2018 பொதுத் தேர்தலில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட மஇகா இரண்டு தொகுதிகளில் வெற்றியடைந்தது. கஹாங், தெங்காரோ ஆகிய இரண்டுமே மஇகா வெற்றி பெற்ற அந்த சட்டமன்றத் தொகுதிகள். இப்போது கஹாங் சட்டமன்ற உறுப்பினரான ஆர்.வித்தியானந்தன் புதிதாக அமையும் இக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தில் இந்தியப் பிரதிநிதியாகப் பதவியேற்றிருக்கிறார். ஏற்கனவே ஆட்சிக் குழுவில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர் இவர்.

ஜோகூர் மாநிலத்தைத் தொடர்ந்து தேசிய முன்னணியே ஆட்சி செய்து வந்திருந்தாலும், இதற்கு முன்னர் இரண்டு தவணைகளின்போது தேசிய முன்னணி ஆட்சி அமைந்தும் – அதில் மஇகா அங்கம் பெற்றிருந்தும் – மஇகா சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருந்தும் – அவர்கள் ஆட்சிக் குழுவில் இடம் பெறமுடியாத அரசியல் நிலைமைகள் இருந்தன என்பது பலருக்குத் தெரியாது.

மஇகாவின் அந்த வரலாற்று சம்பவங்கள் என்ன? எப்போது அவை நடந்தன? ஏன் அத்தகைய நிலைமை ஏற்பட்டது? என்பதைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமா?

1978-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்

1978-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வரை ஜோகூர் மாநிலத்தின் பூலோ காசாப் சட்டமன்ற உறுப்பினராகவும், ஆட்சிக் குழு உறுப்பினராகவும் இருந்தவர் மறைந்த டான்ஸ்ரீ ஜி.பாசமாணிக்கம் (படம்). மஇகா ஜோகூர் மாநிலத்தின் தலைவரும் அவர்தான்!

அப்போதைய ஜோகூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ ஒஸ்மான் சாட். ஜோகூரின் அசைக்க முடியாத, பெரும் வலிமை வாய்ந்த அம்னோ தலைவராகத் திகழ்ந்தவர். சுமார் 15 ஆண்டுகள் (1967 முதல் 1982 வரை) ஜோகூர் மந்திரி பெசாராகப் பதவி வகித்து, அம்மாநிலத்தின் மிக நீண்ட கால மந்திரி பெசாராக வரலாறு பதித்தவர் ஒஸ்மான் சாட்.

அவரது சாதனையைப் பின்னர் 1995-இல் மந்திரி பெசாராகப் பதவியேற்ற அப்துல் கனி ஒத்மான், 18 ஆண்டுகளுக்கு மந்திரி பெசாராக இருந்து முறியடித்தார்.

1978 பொதுத் தேர்தலின்போதும் ஜோகூர் மந்திரி பெசாராக இருந்த ஒஸ்மான் சாட்டுக்கும் பாசமாணிக்கத்திற்கும், இடையிலான நெருக்கம் ஜோகூர் மாநிலம் முழுக்க அனைவரும் அறிந்தது.

1978-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜோகூர் மாநிலத்தில் பூலோ காசாப் சட்டமன்றத்தில் பாசமாணிக்கத்திற்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தராமல் அப்போது மஇகா ஜோகூர் மாநிலத்தின் செயலாளராக இருந்த எம்.கே.முத்துசாமியை வேட்பாளராக நியமித்தார் அப்போதைய மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம்.

பாசமாணிக்கத்திற்கு மீண்டும் சட்டமன்றத்திற்குப் போட்டியிடாமல் வாய்ப்பு மறுத்ததற்கு மாணிக்காவுக்கு ஒரு முக்கியக் காரணம் இருந்தது.

1977 மஇகா துணைத் தலைவர் தேர்தலில் மாணிக்காவுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்த பாசமாணிக்கம்

மிகக் கடுமையான சூழ்நிலையில் 1977-ஆம் ஆண்டில் (துன்) ச.சாமிவேலு –  (டான்ஸ்ரீ) சி.சுப்ரமணியம்  இருவருக்கும் இடையில் நடைபெற்ற மஇகா துணைத் தலைவருக்கான போட்டியில் இறுதி நேரத்தில் பாசமாணிக்கம் சாமிவேலுவை ஆதரித்தார். அதன் காரணமாகவே, சாமிவேலு அந்தப் போட்டியில் வெற்றி பெற முடிந்தது என்றும் கூறுவார்கள்.

மஇகா துணைத் தலைவருக்கான போட்டியில் டான்ஸ்ரீ சுப்ராவை மாணிக்கா ஆதரித்தார் என்பதால், பாசமாணிக்கம் மீது அதிருப்தி கொண்ட மாணிக்கா, அடுத்த ஓராண்டில், 1978-இல் பொதுத் தேர்தல் வந்தபோது பாசமாணிக்கத்திற்கு மீண்டும் ஜோகூர் சட்டமன்றத்திற்குப் போட்டியிட வாய்ப்பு தராமல் மறுத்தார்.

ஆனால், ஜோகூர் மாநிலத்தின் மந்திரி பெசாரான ஒஸ்மான் சாட்தான் (படம்) மாநில தேசிய முன்னணிக்கும் தலைவர். அவரது அங்கீகாரக் கடிதத்தின் அடிப்படையில்தான் வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுவைச் சமர்ப்பிப்பர். ஒஸ்மான் சாட் மாணிக்காவின் பரிந்துரையை ஏற்காமல் தேசிய முன்னணியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் நானே பாசமாணிக்கத்தை வேட்பாளராக நியமிக்கிறேன் எனக் கூறி அங்கீகாரக் கடிதம் பாசமாணிக்கத்திற்கு ஆதரவாகத் தந்து விட்டார்.

வேட்புமனுத்தாக்கலுக்கு ஒருநாள் முன்னதாக இந்த சம்பவங்கள் நடந்தேற, மஇகா வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது, மஇகா வேட்பாளர் பாசமாணிக்கமா, முத்துசாமியா என்று!

பாசமாணிக்கத்தை ஏற்காத மாணிக்கா உடனடியாக அப்போது பிரதமராக இருந்த துன் ஹூசேன் ஓன்னைத் தொடர்பு கொண்டார்.

ஹூசேன் ஓன்னும் ஜோகூர் மாநிலத்துக்காரர். 1982 பொதுத் தேர்தலில் ஸ்ரீ காடிங் தொகுதியில் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்ட ஹூசேன் ஓன் அங்கு சென்றிருந்தபோது, வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு நான் முன்பாக அவரைத் தொடர்பு கொண்டார் மாணிக்கா.

“கட்சி சார்பான வேட்பாளர்கள் யார் என்பதை கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் என்பதுதான் தேசிய முன்னணியின் பாரம்பரியம். நான் பூலோ காசாப் சட்டமன்றத்திற்கு எம்.கே.முத்துசாமியை முன்மொழிந்து அதற்கான அதிகாரபூர்வ அங்கீகாரக் கடிதத்தை என்னுடைய பிரதிநிதி மூலம் அனுப்புகிறேன். நாளைக் காலையில் முத்துசாமியைத் தவிர்த்து பாசமாணிக்கமோ, வேறு யாரோ மஇகா சார்பில் போட்டியிட மந்திரி பெசார் அனுமதி தந்தால், என்னுடைய மற்ற மஇகா வேட்பாளர்கள் நாடு முழுமையிலும் வேட்புமனுத் தாக்கல் செய்யமாட்டார்கள்” என தனது நிலைப்பாட்டை உறுதியோடு ஹூசேன் ஓனுக்குத் தெரிவித்தார் மாணிக்கா.

வேட்புமனுத் தாக்கலுக்கு முதல் நாள் இரவோடு இரவாக மாணிக்காவின் அதிகாரபூர்வக் கடிதத்தைக் கொண்டு சென்று மந்திரி பெசாரிடம் சேர்த்தவர் அப்போது மஇகா தலைமையகத்தின் நிர்வாகச் செயலாளராக இருந்த (அமரர்) அ.துரைராஜ்.

அப்போது மஇகா தலைமையகத்தின் அரசியல் பின்னணி சம்பவங்கள் அறிந்தவர்கள் இதனை உறுதிப்படுத்துவார்கள்.

துன் ஹூசேன் ஓன்

ஹூசேன் ஓன் அதைத் தொடர்ந்து பின்வாங்கினார். 1976-இல் துன் ரசாக்கின் மறைவைத் தொடர்ந்து, பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் அவர் சந்திக்கும் முதல் பொதுத் தேர்தல் அது. எனவே, சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ள அவரும் விரும்பவில்லை.

உடனடியாக ஒஸ்மான் சாட்டைத் தொடர்பு கொண்ட ஹூசேன் ஓன், மஇகா நியமனத்தில் தலையிட வேண்டாம் என்று கண்டிப்பாகக் கூற, மறுநாள் எம்.கே.முத்துசாமியே பூலோ காசாப் சட்டமன்றத்திற்கு வேட்புமனுத் தாக்கல் செய்தார். அந்தப் பொதுத் தேர்தலில் வெற்றியும் பெற்றார்.

ஆனால், இந்த சர்ச்சையினால் மிகவும் ஆத்திரம் அடைந்த ஒஸ்மான் சாட் பொதுத் தேர்தல் முடிந்து, ஆட்சிக் குழு அமைக்கப்பட்டபோது, தனது பதவியின் வலிமையை மஇகாவுக்கும், மாணிக்காவுக்கும் உணர்த்த விரும்பினார். ஆட்சிக் குழு என்பது மந்திரி பெசாரின் தேர்வு, அதில் யாரும் தலையிட முடியாது என்று கூறி, முத்துசாமியை ஆட்சிக் குழுவில் நியமிக்கவில்லை.

மாணிக்கா எவ்வளவோ போராடியும், ஒஸ்மான் சாட் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. அம்னோவிலும் மாநில அளவிலும் செல்வாக்கு மிக்கத் தலைவராக இருந்த காரணத்தால் ஒஸ்மான் சாட்டை ஹூசேன் ஓன் போன்ற தலைவர்களே எதிர்க்கத் துணியவில்லை.

1978 முதல் 1982 வரையிலான தவணையில் ஜோகூர் மாநிலத்தில் தேசிய முன்னணி வெற்றி பெற்றிருந்தும், மஇகா அந்தக் கூட்டணியில் அங்கம் வகித்திருந்தும், முத்துசாமி ஆட்சிக் குழுவில் இடம் பெறாமல் சட்டமன்ற உறுப்பினராகவே இருந்தார்.

மஇகாவுக்கு ஆட்சிக் குழு மறுக்கப்பட்ட இரண்டாவது சம்பவம்…

1989 ஆண்டில் மஇகா தேசியத் தலைவருக்கான போட்டியில் சாமிவேலுவுடன் சுப்பிரமணியம் போட்டியில் குதித்துத் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மஇகாவில் அந்த இரு தலைவர்களுக்கும் இடையில் அரசியல் பகைமை உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில்தான் 1990-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வந்தது.

ஜோகூர், சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சுப்ராவுக்கும், தெலுக் கெமாங் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கு.பத்மநாபனுக்கும் மீண்டும் பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுத்தார் அப்போதைய மஇகா தலைவர் சாமிவேலு.

அப்போது பிரதமராக இருந்தவர் துன் மகாதீர்தான்! சாமிவேலுவுடன் மிகவும் நெருக்கம் பாராட்டிய பிரதமர்களில் ஒருவர் என்றாலும், சாமிவேலு மிகவும் மதிக்கும் பிரதமர் என்றாலும், மகாதீரிடமே “இது கட்சித் தலைமையின் முடிவு” என உறுதியாகக் கூறிவிட்டார் சாமிவேலு.

மகாதீருக்கும் 1990 பொதுத் தேர்தல் சோதனையான காலகட்டம். அம்னோவிலிருந்து விலகிய துங்கு ரசாலி ஹம்சா, செமாங்காட் 46 என்ற கட்சியைத் தோற்றுவித்து, பாஸ், ஜசெகவுடன் கூட்டணி அமைத்து, பொதுத் தேர்தலைச் சந்தித்ததால் அந்தப் பொதுத் தேர்தல் மகாதீருக்குக் கடுமையான சவாலாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது.

ஜோகூரில் சுப்ரா நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரச்சனை அப்போதைய மாநில சுல்தான் மாஹ்முட் இஸ்கண்டார் (இப்போதைய சுல்தான் இப்ராகிமின் தந்தையார்) வரை சென்றது.

அந்த காலகட்டத்தில் ஜோகூர் மாநிலத்தின் சிகாமாட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் சுப்ராவுக்கும், சுல்தானுக்கும் இடையில் மிகவும் அணுக்கமான தொடர்பும் பரஸ்பர மரியாதையும் இருந்தது.

சுப்ராவுக்கு பதிலாக டத்தோ எஸ்.எஸ்.சுப்பிரமணியம் (அப்போது மஇகா உதவித் தலைவராக இருந்தவர்) சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராகப் பரிந்துரைக்கப்பட்ட செய்தியறிந்த சுல்தான் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும், சுல்தானின் அதிருப்தி சாமிவேலுவுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால்,சாமிவேலு சுல்தானின் கோரிக்கைக்கும் இடம் கொடுக்காமல் மறுத்து “இது கட்சித் தலைமையின் முடிவு” என்று உறுதியோடு கூறிவிட்டதாகவும், அப்போதைய ஜோகூர் மாநில மஇகா வட்டாரத்தினர் கூறுவார்கள்.

1990 பொதுத் தேர்தலின்போது, ஜோகூர் மந்திரி பெசாராக இருந்தவர், தற்போது பிரதமராகியிருக்கும் டான்ஸ்ரீ மொகிதின் யாசின். அவரும் சுப்ராவுக்கு நெருக்கமான நண்பர் என்றாலும், அவராலும் சாமிவேலுவின் முடிவை எதிர்த்து செயல்படவில்லை.

இறுதிவரையில் சுப்ராவுக்கு சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை.

1990 பொதுத் தேர்தலில் மகாதீர் தலைமையிலான தேசிய முன்னணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க, ஜோகூர் மாநிலத்திலும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது மொஹிதின் யாசினை மந்திரி பெசாராகக் கொண்ட தேசிய முன்னணி.

அப்போது மஇகா சார்பாக பாசிர் கூடாங் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றிருந்த கே.எஸ்.பாலகிருஷ்ணனின் பெயர் ஆட்சிக் குழுவில் இடம் பெற சாமிவேலுவால் பரிந்துரைக்கப்பட்டது.

ஆட்சிக் குழு பட்டியல் சுல்தானின் ஒப்புதலுக்காக அவரது பார்வைக்குச் சென்றது. சிகாமாட்டில் தான் சொல்லியும் சுப்ராவை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்காத மஇகா தலைமைத்துவத்திற்குப் பாடம் புகட்ட எண்ணிய சுல்தான், ஆட்சிக் குழு பட்டியல் எனது இறுதி ஒப்புதலுக்கு உரியது என்று கூறி, தனது அதிகாரத்தை நிலைநாட்டும் வண்ணம் மஇகா பிரதிநிதியின் பெயரை நீக்கி விட்டார்.

1990 -1995 தவணையிலும் ஜோகூர் மாநிலத்தை தேசிய முன்னணி ஆட்சி செய்தும், அதில் மஇகா அங்கம் பெற்றிருந்தும், மேற்குறிப்பிட்ட சம்பவங்களால் மஇகா பிரதிநிதி ஆட்சிக் குழுவில் இடம் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

மத்திய அரசாங்கத்திலும் மஇகா பிரதிநிதிகளுக்கு நீடித்த சிக்கல்

1990 பொதுத் தேர்தலின்போது சுப்ரா-பத்மா இருவரும் மீண்டும் நாடாளுமன்றத்தில் போட்டியிட சாமிவேலு வாய்ப்பளிக்காதபோது, அந்த முடிவை மாற்றிக் கொள்ளும்படி மகாதீர், சாமிவேலுவை எவ்வளவோ வற்புறுத்தியும் சாமிவேலு மறுத்து விட்டார்.

“வேட்பாளர் நியமனம் என்பது கட்சித் தலைமையின் முடிவு” என்று தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து விட்டார் சாமிவேலு.

பொதுத் தேர்தல் முடிந்து, அமைச்சரவை நியமனம் வந்தபோது, தனது அதிகாரபலத்தை சாமிவேலுவுக்கு உணர்த்த விரும்பினார், இதுபோன்ற அரசியல் சதுராட்டங்களில் சாணக்கியரான மகாதீர்!

“தேசிய முன்னணியின் அங்கத்துவக் கட்சியான மஇகாவின் தலைவர் என்ற முறையில், தேசிய முன்னணியின் பாரம்பரியப்படி அமைச்சர் பதவிக்கு உங்களை நியமிக்கிறேன். ஆனால், துணையமைச்சர்கள் நியமனம் பிரதமர் அதிகாரத்திற்கு உட்பட்டது. நீங்கள் பரிந்துரைப்பவர்களை நான் நியமிக்கப் போவதில்லை. சுப்ரா, பத்மா இருவரையும் மீண்டும் துணையமைச்சர்களாக நியமிக்கப் போகிறேன்” என்று கூறி சாமிவேலுவுக்கு – இப்போது எனது முறை என்று கூறாமல் கூறி – அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் மகாதீர்.

சொன்னபடியே செய்தார்! அமைச்சரவை நியமனங்கள் அறிவிக்கப்பட்டபோது, சாமிவேலு பெயரை அறிவித்து, விட்டு, மஇகாவுக்கான இரண்டு துணையமைச்சர் நியமனங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என பத்திரிகையாளர் சந்திப்பில் பகிரங்கமாகவே கூறிவிட்டார் மகாதீர்.

இதுவும், மஇகா வரலாற்றில் இதற்கு முன் காணப்படாத ஒரு சம்பவமாகும். 6 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தும் அரசாங்கத்தில் மஇகா சார்பில் யாரும் பிரதிநிதிகளாக இல்லாத நிலைமை சில வாரங்களுக்குத் தொடர்ந்தது.

அதன் பின்னர், சாமிவேலுவுக்கும், சுப்ராவுக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்தன.

மீண்டும் சுப்ராவுடன் இணைந்து பணியாற்றுவதாக அறிவித்த சாமிவேலு, மகாதீரிடம் சென்று மஇகாவுக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு துணையமைச்சர்களில் உங்கள் விருப்பப்படி சுப்ராவை நியமிக்கிறேன், எனது விருப்பப்படி ஒருவரை நியமிக்கிறேன் என்று ஒப்புதல் பெற்றார்.

1990 பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்தில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத சுப்ராவுக்கு, மகாதீர் புதிதாக ஒரு செனட்டர் பதவியை ஒதுக்கி அவரை செனட்டராக நியமித்து மீண்டும் துணையமைச்சராக நியமித்தார். மற்றொரு துணையமைச்சராக சாமிவேலு பரிந்துரைத்த மகாலிங்கம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

– இரா.முத்தரசன்