சென்னை – உலகம் முழுவதும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொவிட் 18 நச்சுயிரி, விஜய் நடித்து வரும் “மாஸ்டர்” படத்தையும் பாதித்திருக்கிறது – சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?
ஆம்! அதுதான் நடந்திருக்கிறது!
விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா என்பது அவரது அண்மைய சில படங்களின் அடிப்படையில் பிரம்மாண்டமான மேடையாக, ஆயிரக்கணக்கான இரசிகர்களை ஒரே இடத்தில் திரட்டும் நிகழ்ச்சியாக மாறி விட்டிருக்கிறது.
அது மட்டுமல்லாமல், விஜய் சொல்லப் போகும் புதிய கருத்துகள் என்ன, நடப்பு அரசியலைப் பற்றி அவர் என்ன சொற்களை உதிர்க்கப் போகிறார், என்ன சர்ச்சைகளைக் கிளப்பப் போகிறார் என்பதையெல்லாம் ஆவலுடன் கேட்க அவரது இரசிகர்கள் ஆவலுடன் கேட்கக் கூடுவதும், அவரது கருத்துகளை எப்படித் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கண்கொத்திப் பாம்பாக அரசியல்வாதிகள் காத்திருப்பதும், விஜய் பேச்சை வைத்து எப்படியெல்லாம் விவாதங்கள் நடத்தலாம் என தொலைக்காட்சி அலைவரிசைகள் சிந்தித்துக் கொண்டிருப்பதும் வழக்கமான ஒன்று.
அதே போல இந்த முறை “மாஸ்டர்” படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் மார்ச் 15-ஆம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், ஒரே வித்தியாசம், இந்த முறை ஆயிரக்கணக்கான இரசிகர்களுடன் பிரம்மாண்டமான விழாவாக இல்லாமல், ஒரு பிரபல தங்கும் விடுதியில் திரையுலகின் முக்கியப் பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், படக் குழுவினர் என சில நூறு பேர்களுடன் மட்டும் மூடப்பட்ட அரங்கில் நடைபெறவிருக்கிறது.
காரணம், கொவிட் 19 பாதிப்புதான்! சென்னையிலும் சிலரை கொவிட் 19 நச்சுயிரி பாதித்திருக்கிறது என்பதால் ஆயிரக்கணக்கான இரசிகர்களோடு இசை வெளியீட்டு விழா நடத்தாமல் மூடப்பட்ட அரங்கிற்குள் நடத்த படக் குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.
எனினும், பிரபல தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று, இந்த நிகழ்ச்சிக்கான ஒளிபரப்பு உரிமைகளைப் பெற்றிருக்கிறது. எனவே, நிகழ்ச்சி முடிந்த ஓரிரு வாரங்களில் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்.
அனிருத் இசையில் வெளியாகவிருக்கிறது மாஸ்டர் படம். ஏற்கனவே விஜய் சொந்தக் குரலில் பாடிய “ஒரு குட்டிக் கதை” பாடல் வெளியாகி இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் பிரபலமாகி விட்டது.
“கைதி” படத்திற்குப் பிறகு விஜய் படத்தில் இசையமைப்பாளராக அனிருத் இணையும் இரண்டாவது படம் “மாஸ்டர்”.