சென்னை – நேற்று வெள்ளிக்கிழமை சட்டமன்றத்தில் உரையாற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழ் நாட்டில் இயங்கும் 6 பல்கலைக் கழகங்களுக்கு, ஆராய்ச்சிப் பணிகளுக்காக 210 கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்தார்.
இணையம், மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்கள், சுகாதாரம், பையோ மெடிசன் என்றழைக்கப்படும் உயிரியல் மருத்துவம் போன்றவை உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.
அண்ணா பல்கலைக் கழகம் (மின்னியல் வாகனங்கள்), அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (சுகாதாரம் மற்றும் சூழியல்), பாரதிதாசன் பல்கலைக் கழகம் (சுகாதாரம்), பாரதியார் பல்கலைக் கழகம் (புற்றுநோய்), மதுரை காமராஜ் பல்கலைக் கழகம் (உயிரியல் மருத்துவம்), சென்னைப் பல்கலகைக் கழகம் (உயிரியல் மருத்துவப் பயன்பாடுகள்) ஆகிய அரசு சார்பு பல்கலைக் கழகங்களுக்கு தலா 35 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக பழனிசாமி தெரிவித்தார்.