கோலாலம்பூர் – துன் மகாதீரின் இரண்டு ஆண்டுகால ஆட்சியில், அவருடைய வெளியுறவுக் கொள்கையில் முக்கிய அங்கமாகத் திகழ்ந்தது இந்திய அரசாங்கத்திற்கு எதிரான அவரது கருத்துகளும், அதைத் தொடர்ந்து இந்திய அரசாங்கம் மலேசியாவிலிருந்து செம்பனை எண்ணெய் இறக்குமதிக்கு எதிராக எடுத்த பதிலடி நடவடிக்கைகளும் ஆகும்.
ஆனால் தற்போது மொகிதின் யாசின் தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருப்பதால், இந்தியாவுடனான அதன் வெளியுறவுக் கொள்கையிலும் மாற்றம் வரலாம் – அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான செம்பனை எண்ணெய் மீதிலான வணிகப் போரும் ஒரு முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியிடப்பட்டிருக்கும் புள்ளிவிவரங்களின்படி கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியா மொத்தம் 540,470 டன் செம்பனை எண்ணெயை இறக்குமதி செய்திருக்கிறது. இதில் 5,890 டன் மட்டுமே மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால், ஜனவரி 2020-இல் 136,219 டன் மலேசிய செம்பனை எண்ணெயை இறக்குமதி செய்த இந்தியா, டிசம்பர் 2019-இல் 110,562 டன் செம்பனை எண்ணெயை இறக்குமதி செய்தது.
இதன் மூலம், இந்தியாவின் பதிலடி நடவடிக்கையால் மலேசிய செம்பனை எண்ணெய் ஏற்றுமதி பாதிப்படைந்திருக்கிறது என்பது நிரூபணமாகியுள்ளது.
அதே வேளையில், மலேசிய செம்பனை எண்ணெயை இந்தியா தவிர்ப்பதால், அதனால் மலேசிய செம்பனைத் தொழில் வீழ்ச்சியடைந்ததற்கான அறிகுறிகளும் தென்படவில்லை.
இந்தியா பின்வாங்கியதால், மலேசியா புதிய சந்தைகளை அடையாளம் கண்டு தனது செம்பனை எண்ணெய் ஏற்றுமதிகளை விரிவாக்கியுள்ளதால், மலேசியாவின் செம்பனைத் தொழில் தொடர்ந்து நிலையாக இருந்து வருகிறது.
காஷ்மீர் விவகாரத்தில் மகாதீர் தலையிட்டுக் கருத்துகளைக் கூறியதைத் தொடர்ந்து சுத்திகரிக்கப்பட்ட செம்பனை எண்ணெய் மற்றும் அதன் தொடர்பான பொருட்களைக் கட்டுப்பாட்டுப் பொருட்களின் பட்டியலில் இந்திய அரசாங்கம் கடந்த ஜனவரி 8-ஆம் தேதி இணைத்தது.
அதைத் தொடர்ந்து, சுத்திகரிக்கப்பட்ட செம்பனை எண்ணெய் பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் இந்திய அரசாங்கத்தின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என்ற கட்டுப்பாட்டினால், இயல்பாகவே மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் செம்பனை எண்ணெய் அளவும் வெகுவாகக் குறைந்துள்ளது.
இதற்கிடையில் இந்தியாவின் சுத்திகரிக்கப்பட்ட செம்பனை எண்ணெய் இறக்குமதியும் ஒட்டுமொத்தமாகக் குறைந்துள்ளது.
டிசம்பர் 2019-இல் 94,816 டன்களாக இருந்த சுத்திகரிக்கப்பட்ட செம்பனை எண்ணெய் பொருட்கள் இறக்குமதி, கடந்த பிப்ரவரி 2020-இல் வெறும் 33,677 டன்களாகக் குறைந்திருக்கிறது. ஏற்பட்ட இந்த இடைவெளித் தேவைகளை சூரிய காந்தி எண்ணெய், சோயா பீன் எண்ணெய் போன்றவை ஈடு செய்துள்ளன.