Home உலகம் “திட்டமிட்டபடி தோக்கியோ ஒலிம்பிக்ஸ் நடைபெறும்” – ஜப்பானியப் பிரதமர் உறுதி

“திட்டமிட்டபடி தோக்கியோ ஒலிம்பிக்ஸ் நடைபெறும்” – ஜப்பானியப் பிரதமர் உறுதி

976
0
SHARE
Ad

தோக்கியோ – எதிர்வரும் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 வரை தோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பரவி வரும் கொவிட் 19 பாதிப்புகளால் ஒலிம்பிக் போட்டிகள் பெருமளவில் பாதிக்கப்படும் என்றும், அதன் காரணமாக எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு அந்தப் போட்டிகள் ஒத்தி வைக்கப்படலாம் என்றும் ஆரூடங்கள் கூறப்பட்டிருந்தன.

“கொவிட் 19 பிரச்சனைகளைத் தீர்த்து வைத்து அது பரவுவதையும் தடுத்து திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவோம்” என பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் ஷின்சோ அபே தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

எனினும், இதுகுறித்த இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் அனைத்துலக ஒலிம்பிக் மன்றத்தைச் சார்ந்தது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னர் நடத்தப்படும் வரலாற்று பூர்வ நிகழ்ச்சி, ஒலிம்பிக் தீபத்தை, ஓட்டப்பந்தய வீரர்கள் பல நாடுகளைக் கடந்து ஏந்திவந்து ஒலிம்பிக் நடைபெறும் நாட்டில் கொண்டு வந்து சேர்ப்பதாகும். கிரீஸ் நாட்டில்  ஒலிம்பிக் தீபம் ஏந்தும் நிகழ்ச்சி இரத்து செய்யப்படுவதாக அனைத்துலக ஒலிம்பிக் மன்றம் அறிவித்திருக்கிறது.

ஒலிம்பிக் மன்றத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்துதான் ஷின்சோ அபேயின் அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.

ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி ஜப்பானில் கொண்டு வரும் நிகழ்ச்சி எதிர்வரும் மார்ச் 26 புக்குஷிமா நகரில் தொடங்கவிருக்கிறது. அந்த நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், ஒலிம்பிக் தீபம் புக்குஷிமா நகரை வந்தடையும் என்றும் ஷின்சோ அபே (படம்) கூறியிருக்கிறார்.

உலகம் முழுவதிலும் இதுவரையில் பல விளையாட்டுப் போட்டிகள் கொவிட் 19 அச்சுறுத்தலால் இரத்து செய்யப்பட்டிருக்கின்றன அல்லது ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

அந்தப் பட்டியலில் ஜப்பானில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளும் இடம் பெறுமா என்பது இன்னும் தெரியவில்லை.

ஜப்பானில் இதுவரை 1,400 பேர்கள் கொவிட் 19 நச்சுயிரியால் பாதிக்கப்பட்டு, அதன் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எனினும் ஒருசில நாடுகளைப் போன்று மிக அதிக அளவில் இந்த நோய் தாக்குதல் ஜப்பானில் பரவவில்லை.