தோக்கியோ : ஜப்பானின் முன்னாள் பிரதமராக ஷின்சோ அபே, நீண்ட காலம் பதவி வகித்தவர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 8) நபர் ஒருவனால் சுடப்பட்டார். அதைத் தொடர்ந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
மேற்குப் பகுதியில் உள்ள நகரமான நாராவில் அவர் பேசிக் கொண்டிருந்தபோது, ஒரு நபர், 67 வயதான அபே மீது, வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் அவருக்குப் பின்னால் இருந்து சுட்டார் என்று ஜப்பானிய ஊடகங்கள் முன்பு தெரிவித்தன.
1930-ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு முன்னாள் ஜப்பானியப் பிரதமர் சுட்டுக் கொல்லப்படுவது இதுவே முதன் முறையாகும்.
அபேயின் மரணம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பல நாட்டுத் தலைவர்களும் அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
சுடப்பட்ட பின்னர் ஹெலிகாப்டர் மூலம் அபே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 41 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். டெட்சுயா யமகாமி என அடையாளம் காணப்பட்ட அந்த சந்தேக நபர், தான் அபே மீது அதிருப்தி அடைந்ததாகவும், அவரைக் கொல்ல விரும்பியதாகவும் காவல்துறையிடம் தெரிவித்திருக்கிறார்.