Home One Line P2 மாஸ்டர் – அரசியல் பேசுவதைத் தவிர்த்து அம்மாவைக் கட்டிப் பிடித்த விஜய்

மாஸ்டர் – அரசியல் பேசுவதைத் தவிர்த்து அம்மாவைக் கட்டிப் பிடித்த விஜய்

823
0
SHARE
Ad

சென்னை – கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெற்ற “மாஸ்டர்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் என்ன பேசப் போகிறார், அரசியல் சர்ச்சைக் கருத்துகள் எதையாவது கூறுவாரா என தமிழகத்தின் திரையுலக – அரசியல் தரப்புகள் ஆவலுடன் காத்திருக்க, அப்படி எதுவும் பேசாமல் தவிர்த்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார் அவர்.

மாஸ்டர் படத்தைப் பற்றியும், படக்குழுவைப் பற்றியும், தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் விஜய் சேதுபதி குறித்தும் பல விவரங்களை விஜய் தனதுரையில் பகிர்ந்து கொண்டார்.

எனினும், அரசியல் குறித்து எந்தவிதக் கருத்தையும் கூறாமல் தவிர்த்து விட்டார். அவரது உரை முடிந்ததும், நிகழ்ச்சி நடத்துனர்களாகச் செயல்பட்ட பாவனா மற்றும் விஜய் என்ற அறிவிப்பாளரும் தொடர்ந்து விஜய்யிடம் சில கேள்விகளைக் கேட்டனர்.

#TamilSchoolmychoice

அதில் ஒரு கேள்வி, “எதிர்கால விஜய்யிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்வி எது?” என்பதாக இருந்தது. அதற்குப் பதிலளித்த விஜய் “என்ன ஜாலியாக இருக்கிறீர்களா என்று கேட்பேன். ஏனென்றால் அவருக்கு ரெய்ட் (வருமானவரி சோதனை) எதுவும் இல்லாமல் அப்போது ஜாலியாக இருப்பார்” என்று கூறினார்.

பின்னர் சுதாரித்துக் கொண்டு தொடர்ந்த விஜய், “இப்போதும் ஜாலியாகத்தான் இருக்கிறேன்” என்று கூறி முடித்துக் கொண்டார்.

அம்மாவைக் கட்டிப் பிடித்த விஜய்

நிகழ்ச்சி தொடங்கும்போது அரங்கத்துக்குள் நுழைந்த விஜய், அங்கு அமர்ந்திருந்த தனது தந்தையார் எஸ்.ஏ.சந்திரசேகரன், தாயார் ஷோபா சந்திரசேகரர் இருவரையும் கட்டிப் பிடித்து வாழ்த்துகளைப் பரிமாறிவிட்டு சென்று அமர்ந்தார்.

அதன்பின்னர், நிகழ்ச்சியின்போது எஸ்.ஏ.சந்திரசேகரனையும் விஜய்யின் தாயாரையும் மேடைக்கு அழைத்து உரையாற்றுமாறு அறிவிப்பாளர்கள் கேட்டுக் கொண்டனர்.

என்னைப் பேச அழைப்பார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறிய சந்திரசேகரன் சுருக்கமாகப் பேசிவிட்டு தனது உரையை முடித்துக் கொண்டார். விஜய் தாயார் ஷோபாவிடம் அறிவிப்பாளர்கள், பிடித்த பாடல் என்ன என்பது போன்ற சில கேள்விகளைக் கேட்டனர்.

இறுதியாக, மகனாக விஜய்யிடம் நீங்கள் என்ன கேட்க விரும்புகிறீர்கள் என்று அறிவிப்பாளர் கேட்க, எனது மகனை நான் கட்டிப் பிடிக்க வேண்டும் என ஷோபா சந்திரசேகரன் கூற, உடனடியாக கீழே அமர்ந்திருந்த விஜய் மேடைக்குச் சென்று தனது தாயாரைக் கட்டியணைத்தார். ஷோபாவும் தனது அன்பு மகனுக்கு கன்னத்தில் முத்தமிட்டு மகிழ்ந்தார்.

அதைத் தொடர்ந்து தனது தந்தையாரிடம் சென்ற விஜய் அவரையும் கட்டிப் பிடித்து அரவணைத்து பாசத்தைப் பொழிந்தார்.

விஜய் பேசப்போகும் அரசியல் கருத்துகள் சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்படும் என அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்க, இறுதியில் விஜய் தனது அம்மாவை மேடையில் கட்டியணைத்துப் பாசத்தைப் பொழிந்த படக் காட்சிகள்தான், சமூக ஊடகங்களில் தற்போது உலவி வருகின்றன.