கோலாலம்பூர்: கொவிட் -19 பாதிப்பைச் சமாளிப்பதற்காக அரசாங்கத்தின் முயற்சியில் பிறப்பிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்த அமைச்சரவை சிறப்புக் குழுவை அமைத்துள்ளது என்று அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
இந்த குழுவில் 19 அமைச்சர்கள், அரசாங்க தலைமைச் செயலாளர், தேசிய பாதுகாப்பு மன்றம் (எம்கேஎன்), காவல் துறைத் தலைவர், ஆயுதப்படைத் தலைவர், சட்டத்துறைத் தலைவர் மற்றும் அமைச்சின் தலைமைச் செயலாளர்கள் அடங்குவதாக அவர் கூறினார்.
நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த குழு அமைக்கப்பட்டது.
“நாங்கள் (சிறப்புக் குழுக்கள்) நேற்று தொடங்கி இன்று வரைக்கும் இரண்டு கூட்டங்களை நடத்தியுள்ளோம். இந்த கூட்டம் அரசாங்கத்தின் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கடைசி நாளான மார்ச் 31 வரை தொடரும்” என்று இன்று வியாழக்கிழமை நடந்த குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
மக்களுக்கு சமீபத்திய தகவல்களை அறிவிக்க ஒவ்வொரு நாளும் நண்பகலில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.