கோலாலம்பூர்: மத்திய அரசின் மாநில முதலமைச்சர்களுக்கு மட்டுமே கொவிட்-19 தொடர்பான சிறப்புக் கூட்டத்திற்கான அழைப்பில் ஏற்பட்ட பிழை காரணமாக அரசாங்க தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ முகமட் சுகி அலி மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் ஏற்கனவே அனைத்து முதலமைச்சர்களையும், முதல்வர்களையும் விதிவிலக்கு இல்லாமல் அழைக்குமாறு உத்தரவிட்டதாக அவர் கூறினார்.
“இது தொடர்பாக, கூட்டத்தின் செயலகம் சார்பாக, மத்திய அரசின் மாநில அரசின் முதலமைச்சர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்ட அழைப்பின் தவறான புரிதலுக்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.”
“பினாங்கு, கெடா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் சபா மாநிலங்களிருந்து , மாநில மேம்பாட்டு இயக்குநர்கள் மட்டுமே கலந்து கொள்ள அழைக்கப்பட்டார்கள்” என்று அவர் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.
பிரதமர் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டார் என்றும் அரசியல் கட்சி பின்னணியைப் பொருட்படுத்தாமல் அனைத்து மாநில அரசுகளுடனும் ஒத்துழைக்க தனது தெளிவான நிலைப்பாட்டைக் கூறினார் என்றும் முகமட் சுகி வலியுறுத்தினார்.
எனவே, எதிர்காலத்தில் கொவிட்-19 பரவுவதை நிவர்த்தி செய்வதற்காக ஒரு சிறப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்க மொகிதின் நேரடி உத்தரவவைப் பிறப்பித்துள்ளார் என்று அவர் கூறினார்.
முன்னதாக, நம்பிக்கைக் கூட்டணி, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை ஒருங்கிணைக்க பிரதமருடனான சிறப்பு கூட்டத்திற்கு அக்கூட்டணியின் மாநில முதலமைச்சர்கள் அழைக்கப்படவில்லை என்று வருத்தம் தெரிவித்திருந்தது.