கோலாலம்பூர்: கொவிட் -19 நோய் தடுப்பு போராட்டத்திற்கு உதவுவதற்காக அரசாங்கம் கூடுதல் 600 மில்லியன் ரிங்கிட்டை சுகாதார அமைச்சகத்திற்கு வழங்கவுள்ளது என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று திங்கட்கிழமை அறிவித்தார்.
நேரடியாக ஒளிபரப்பப்பட்ட செய்தியாளர் கூட்டத்தின் போது பேசிய அவர், கொவிட் -19 தொற்று சங்கிலியை உடைப்பதற்கான முயற்சிகளுக்கு 500 மில்லியன் ரிங்கிட் செலவிடப்படும் என்று கூறினார். கூடுதல் செயற்கை உயிர்ப்பு அமைப்புகள், தீவிர சிகிச்சை பிரிவு உபகரணங்கள், கொவிட் -19 சோதனையை நடத்துவதற்கு தொழிலாளர்கள் மற்றும் ஆய்வக சாதனங்கள், மருத்துவத்திற்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) வாங்குதல் ஆகியவை இதில் அடங்கும்.
“இந்த முக்கியமான பொருட்களை வாங்குவதை விரைவுபடுத்துவதற்காக, அரசாங்கம் அவசரகால கொள்முதல் நடைமுறைகளைப் பயன்படுத்தும்,” என்று அவர் கூறினார்.
மற்றொரு 100 மில்லியன் ரிங்கிட் 2,000 ஒப்பந்த ஊழியர்களை, குறிப்பாக செவிலியர்களை பணியமர்த்துவதற்கு உபயோகிக்கப்படும் என்று அவர் கூறினார்.