கொவிட் – 19 : தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு மேலும் விரிவாக்கம் – மாவட்ட எல்லைகள் மூடப்படுகின்றன
சென்னை – நேற்று ஞாயிற்றுக்கிழமைஇந்தியா முழுவதும் மக்கள் ஊடரங்கு வெற்றிகரமாகப் பின்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் கொவிட்-19 பாதிப்புக்கு எதிரான போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொவிட்-19 தொடர்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்திருக்கும் அறிவிப்புகள், தமிழகத்தின் சில முக்கிய சம்பவங்கள் பின்வருமாறு:
மாவட்ட எல்லைகள் மூடப்படுகின்றன
நாளை செவ்வாய்க்கிழமை (மார்ச் 23) முதல் தமிழகத்தின் மாவட்ட எல்லைகள் மூடப்படுகின்றன.
ஏற்கனவே, தமிழகத்தின் அண்டை மாநிலங்களுக்கான எல்லைகள் மூடப்பட்டிருக்கின்றன. அத்தியாவசியப் பொருட்களுக்கான போக்குவரத்து வாகனங்கள் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் ஊரடங்கு
நாளை செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முனைந்துள்ளதால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்திருப்பதாகவும், பொதுப் போக்குவரத்துகள் மூலம் ஊர்களுக்குத் திரும்ப மக்கள் பேருந்து நிலையங்களில் குவிந்து வருகின்றனர்.
கொவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
இதற்கிடையில் தமிழ் நாடு முழுவதும் கொவிட்-19 பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். எனவே, தமிழ் நாட்டில் இன்னும் கொவிட்-19 தீவிரமாகப் பரவவில்லை. அதற்கு முன்பாகவே தமிழக அரசாங்கம் தக்க முன்னேற்பாடுகளை எடுத்துள்ளது.
இந்தியா முழுமையிலும் 433 பேர்கள் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.