கோலாலம்பூர் – மலேசியா திரும்ப முடியாமல் தமிழகத்தின் சென்னை, திருச்சி நகர்களில் சிக்கிக் கொண்டுள்ள மலேசிய இந்தியர்களை நாட்டுக்குத் திரும்பிக் கொண்டுவர முனைப்புடன் செயல்பட்டு வரும் மஇகாவின் ஏற்பாட்டில் அவர்கள் மேலும் இரண்டு விமானங்களின் மூலம் நாளை செவ்வாய்க்கிழமை கோலாலம்பூருக்கு திரும்ப கொண்டு வரப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தகவல்களை வெளியிட்ட மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ எம்.அசோஜன் (படம்), ஒரு விமானம் திருச்சிக்கும் மற்றொரு விமானம் சென்னைக்கும் இயக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார். இந்த ஒவ்வொரு விமானமும் தலா 186 பயணிகளை ஏற்றி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் இந்த விமானங்கள் இன்றிரவு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கின்றன என்றும் அசோஜன் மேலும் தெரிவித்தார்.
இதற்கான முன் அனுமதியை விஸ்மா புத்ரா வழங்கியிருக்கிறது.
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் முயற்சியிலும், மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஏற்பாட்டிலும் மஇகாவின் இந்த முயற்சிகள் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் குரல் ஒலிப்பதிவு மூலம் சமூக ஊடகங்களின் வழி அசோஜன் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.
மேலும் 4 விமானங்கள், தமிழகத்தில் சிக்கிக் கொண்டுள்ள மலேசிய இந்தியர்களை மீண்டும் கொண்டு வர தயார் நிலையில் இருப்பதாகவும் எனினும் தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக முன் அனுமதிகள் பெறுவதில் தாமதங்கள், சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இதைத் தீர்க்கத் தாங்கள் பாடுபட்டு வருவதாகவும் அசோஜன் தனது ஒலிப்பதிவில் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், தமிழகத்தில் சிக்கிக் கொண்டுள்ளவர்களை திரும்பக் கொண்டுவர, இன்றிரவு சென்னை, திருச்சி செல்லும் ஏர் ஆசியா விமானங்களின் மூலம், மலேசியாவில் சிக்கிக் கொண்டுள்ள இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் தமிழகம் திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களை வழியனுப்ப மலேசியாவுக்கான இந்தியத் தூதர் மிருதுள் குமார், டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ சரவணன் ஆகியோர் கேஎல்ஐஏ விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்திற்கு வந்திருந்தனர்.
அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய விக்னேஸ்வரன் “இந்த விவகாரத்தில் மஇகா நிறைய பணத்தை செலவு செய்து வந்திருக்கிறது என்றாலும் இந்திய சமுதாயத்தைப் பிரதிநிதிக்கின்ற கட்சி என்ற முறையில் நமது இன சகோதர, சகோதரிகளுக்குப் பிரச்சனை என்றால் எப்போதும் துணை நிற்கிற கட்சியாக மஇகா திகழ்ந்து வந்திருக்கிறது. அந்த வகையில் நமது இன சகோதரர்கள் நாட்டுக்குத் திரும்பி வர முடியாமல் தமிழகத்தில் சிக்கிக் கொண்டுள்ளதைப் பார்த்துக் கொண்டு மஇகாவால் சும்மா இருக்க முடியாது. அந்த அடிப்படையில்தான் அதிரடியாக செயல் நடவடிக்கையில் இறங்கி நமது கடமையைச் செவ்வனவே செய்து வருகிறோம்” என்று கூறினார்.