Home One Line P1 டாக்டர் ச.சுப்பிரமணியம் : கடந்த காலத்தில் சுகாதார அமைச்சைச் சிறந்த முறையில் கையாண்டவர்

டாக்டர் ச.சுப்பிரமணியம் : கடந்த காலத்தில் சுகாதார அமைச்சைச் சிறந்த முறையில் கையாண்டவர்

1161
0
SHARE
Ad

(இன்று ஏப்ரல் 1, முன்னாள் சுகாதார அமைச்சரும், மஇகாவின் 9-வது தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியத்தின் பிறந்த நாள். அதனை முன்னிட்டு அவரது கடந்த காலப் பணிகள் குறித்த இந்த சிறப்புக் கட்டுரையை எழுத்தாளர் நக்கீரன் எழுதியுள்ளார்)

தற்போது கொவிட்-19 பிரச்சனைகளால் மலேசியாவில் சுகாதார அமைச்சின் பணிகள் முதன்மை கவனத்தை ஈர்த்திருக்கும் நிலையில், கடந்த காலத்தில் சுகாதார அமைச்சர்களாகப் பணியாற்றியவர்களின் திறன்களும், பணிகளும் அடிக்கடி ஒப்பீடு செய்யப்படுகின்றன.

#TamilSchoolmychoice

தற்போதைய நடப்பு சுகாதார அமைச்சர் கண்ணில் காட்டப்படாமலேயே, அனைத்து அறிவிப்புகளும் சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநராலேயே வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த காலங்களில்  டாக்டர் சுப்பிரமணியம் சுகாதார அமைச்சராக இருந்து ஆற்றிய பணிகளையும், மஇகா தேசியத் தலைவராக மேற்கொண்ட திட்டங்களையும், அவரது பிறந்த நாளான இன்றைய நாளில் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.

2004-இல் தீவிர அரசியல் பிரவேசம்

ஒருவர் எவ்வளவுதான் திறமை வாய்ந்தவராக இருந்தாலும், அரசியலில் அவருக்கு நேரமோ, அதிர்ஷ்டமோ, பிராப்தமோ, சூழ்நிலைகளும் – அல்லது எல்லாம் இணைந்தோ பொருத்தமாக அமைந்தால்தான் அரசாங்க உயர் பதவிகளும், தலைமைப் பொறுப்புகளும் அவரை வந்தடையும்.

அண்மையில் பிரதமரான மொகிதின் யாசின் வரை இந்த நிலைமை பொருந்தும்.

அந்த வகையில், நாடு பதினொன்றாவது பொதுத் தேர்தலை எதிர்கொண்ட 2004-ஆம் ஆண்டில் டாக்டர் சுப்ராவுக்கு, தீவிர அரசியலில் நாடாளுமன்ற உறுப்பினராக காலடி வைக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் தோல்மருத்துவத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவராக மலாக்காவில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், அரசியலில் அம்மாநிலத்தில் ஒரு சாதாரண கிளைத் தலைவராகவும், மாநில அளவில் பொறுப்புகளிலும் இருந்தார்.

2004 பொதுத் தேர்தலில் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் தேர்தல் வெற்றிக்குப் பின் நாடாளுமன்றச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.

மனிதவள அமைச்சராக….

2008 பொதுத் தேர்தலில் அப்போதைய மஇகா தலைவர்களின் தோல்வியால் அமைச்சரவையில் மனித வள அமைச்சராக இடம் பெற்றார்.

அதே காலக் கட்டத்தில் மஇகா அரசியலிலும் தலைமைச் செயலாளர், துணைத் தலைவர், தேசியத் தலைவர் என்றெல்லாம் மளமளவென்று அடுத்தடுத்த ஆண்டுகளில் உச்சத்தைத் தொட்டார்.

தனது அரசியல் பயணத்தில் நிறைகுடம் போன்ற தன்மையுடன் அரசியலில் வன்போக்கு இல்லாமல் மென்போக்கை கைகொண்டிருந்தவர் இவர்.

2008 முதல் 2014 வரை மனிதவள அமைச்சராக இருந்தபோதுதான், தொழிலாளர்களுக்கு அடிப்படை மாத சம்பளம் (900.00 வெள்ளி) முதன் முதலில் அறிவிக்கப்பட்டது. அதற்காக, பல கட்ட முன்னெடுப்புகளை அமைச்சரவையில் மேற்கொண்டவர் இவர்.

அரசுப் பணியாளர்களைப் போல, தனியார் துறையிலும் தகுதியும் அனுபவமும் வாய்க்கப் பெற்றவர்கள் அறுபது வயது வரை பணியாற்ற ஆவன செய்த அமைச்சரும் இவர்தான்.

மஇகா தேசியத் தலைவராக…

தமிழ்ப் பள்ளிகளின் மறுமலர்ச்சி, கட்டமைப்புக்காக அதிகமான நிதியை அந்நாளைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் மூலம் பெற்றுத் தந்ததுடன் ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கைவழி அதை 100 மில்லியன் என நிர்ணயம் செய்தார். இப்போது, அது 50 மில்லியனாகக் குறைந்து விட்டாலும் தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டில் எப்போதும் கருத்தைச் செலுத்தியவர் சுப்ரா.

ஏழு புதிய தமிழ்ப் பள்ளிகளுக்கு நஜிப் துணையுடன் அடித்தளமிடப்பட்டது இவரின் காலத்தில்தான்; குறிப்பாக, இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் வளர்ச்சிக்காக பல வகையாலும் துணை நின்றவர். மலேசியக் கல்விச் சான்றிதழ் (எஸ்பிஎம்) தேர்வில் பத்து பாடங்கள் மட்டும் என்று வரையறை செய்து, இன்றைய பிரதமர் (மொகிதின் யாசின்) கல்வி அமைச்சராக இருந்த போது அறிவிக்கப்பட்ட காலத்தில் தமிழ் மற்றும் தமிழ் இலக்கியப் பாடங்களும் இணைத்துக் கொள்ளப்பட்டு இந்திய மாணவர்கள் குறிப்பாக எஸ்பிஎம் தேர்வில் 12 பாடங்களை அதிகாரப்பூர்வமாக எழுத ஆவன செய்தார்.

இடைநிலைப் பள்ளி தமிழாசிரியர் அமைப்பான இலக்கியகத்தின்வழி நிதி அளித்து இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாட நூல்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்தார். இந்திய சமுதாயத்திற்கு மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்பிற்காக 1,500 இடங்களைப் பெற்றுத் தந்த டாக்டர் சுப்ரா, அடிக்கடி சமூக – சமய அமைப்புகளுடன் சந்திப்புக் கூட்டம் நடத்தி கருத்துப் பரிமாற்றம் செய்து, சமுதாய நடப்பு நிலையை அவ்வப்பொழுது அறிந்து வந்தார்.

குறிப்பாக, ஆலயங்களுக்கும் பொது அமைப்புகளுக்கும் நிறைய அளவில்  நிதி பெற்றுத் தந்ததுடன் இந்தியர் சமூக – பொருளாதார மேம்பாட்டுப் பிரிவிற்கு (செடிக்) பிரதமர் துறையில் நிரந்தர இடத்தை – அதனை ஓர் இலாகாவாக – உருவாக்கினார். அந்த அமைப்புதான் இன்றும் மித்ரா என்ற பெயரில் தனது பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்திய சமூகத்தின் தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் ஒருங்கிணைத்து பத்தாண்டு கால திட்டவரைவினை புளுபிரிண்ட் என்ற பெயரில் அப்போதைய பிரதமர் நஜிப்புடன் அறிமுகப்படுத்தினார்.

அந்த சிறந்தத் திட்டம் முழுமை பெறும் முன்னரே, 2018 பொதுத் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுத்தது.

சுகாதார அமைச்சராக…

2013 பொதுத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார் சுப்ரா.

சுகாதார அமைச்சில் இவர் செய்த புத்தாக்கப் பணிகள் ஏராளம். சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் எளிதாக மருத்துவம் பெற பல மாற்றங்களைச் செய்தார்.

இவர் காலத்தில் மருந்துத் தட்டுப்பாடு இல்லாத சூழ்நிலையை உருவாக்கினார். ஒவ்வொரு மலேசியரும் ஒரு வெள்ளி கட்டணத்தில் சராசரியாக 75 வெள்ளி மதிப்புள்ள மருத்துவ சேவையை பெற முடிந்தது என மதிப்பிடப்படுகிறது. மருத்துவமனை கட்டுமானம், மருந்து கொள்முதல், துப்புரவு பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டார்.

ஒரு மருத்துவராகவும் இருந்த காரணத்தால், சுகாதார அமைச்சின் பணிகளையும், குறிப்பாக மருத்துவர்களின் பணிகள், சிரமங்களையும் அவரால் எளிதில் புரிந்து கொண்டு அதற்கேற்ப சிறப்பு பணியாற்ற முடிந்தது.

மலேசியத் தமிழ் மொழி – இலக்கிய வளர்ச்சிக்காக…

எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டிற்கும் இந்த மலையக மண்ணில் இவர் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது. மலேசிய எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து மாதந்தோறும் ஒரு நூல் வெளியீட்டு விழாவை நடத்தி, இலக்கிய ஆர்வலர்களின் தமிழ்த் தாகத்திற்கு தடாகமாக இருந்தார்.

அதனிலும் மேலாக, பத்திரிகையாளர்களை, பொதுவாக ஊடகத் துறையினரை, அதிலும் அனைத்து மொழி நிருபர்களையும் மிகவும் மதித்தவர்,அரவணைத்தவர் டாக்டர் சுப்ரா.

வாரந்தோறும் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தியதோடு, நிகழ்ச்சிகளின்போதும் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இவர், முக்கியமான காலகட்டத்தில் மஇகா அரசியல் நெருக்கடிகளையும் சமாளித்தார்.

மஇகா, நீதிமன்ற வழக்குகள், சங்கப் பதிவிலாகாப் பிரச்சனைகள், மறுதேர்தல் என பல சிக்கல்களைச் சந்தித்தபோது, அவற்றையெல்லாம் திறமையாகச் சமாளித்துக் கடந்து வந்து, கட்சியைக் கட்டுக் கோப்பாக இயக்கினார். தன்னை எதிர்த்துக் கட்சிகளில் இருந்து வெளியேறிவர்களையும் மீண்டும் இணைத்துக் கொண்டார்.

இரு பிரதமர்களின் கீழ் பணியாற்றிய, முப்பது ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவ அனுபவம் வாய்த்த மருத்துவரான இவருக்கு, மஇகா வரலாற்றிலும் இந்திய சமுதாயத்தினர் மத்தியிலும் நிலைத்த இடம் உண்டு.

கூட்டங்களில் உரையாற்றத் தொடங்கும் முன் பெரும்பாலும் பொய்யாமொழிப் புலவனார் யாத்த திருக்குறள் பெட்டகத்தில் இருந்து முதல் குறளைச் சொல்லி, காலமெல்லாம் திருக்குறளை முன் மொழிந்த இந்தத் தலைவருக்கு இன்று ஏப்ரல் முதல் நாள் பிறந்த நாள்.

அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்போம்!

-நக்கீரன்